டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஊரை காலி செய்வது போல் நடித்து போராட்டம் பாவூர்சத்திரம் அருகே நடந்தது

பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஊரை காலி செய்வது போல் நடித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2017-06-11 21:30 GMT

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஊரை காலி செய்வது போல் நடித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டம்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜனவரி மற்றும் மே மாதங்களில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் இதுதொடர்பாக பொதுமக்களின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் கடை மூடப்படாததால் கடந்த 1–ந் தேதி முதல் டாஸ்மாக் கடை அருகில் பொதுமக்கள் பந்தல் அமைத்து, சமையல் செய்து சாப்பிட்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஊரை காலி செய்வது போல் நடித்து...

இந்த நிலையில் இந்த போராட்டம் நேற்று 11–வது நாளாக நீடித்தது. அப்போது, டாஸ்மாக் கடைகள் உள்ள ஊரில் பொதுமக்கள் குடியிருக்க முடியாது என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவரும் மாட்டு வண்டிகளில் பெட்டி, படுக்கையுடன் ஊரை காலி செய்வது போல் நடித்து காட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்