இந்த நிலை மாறினால்தான் இந்தியாவின் நிலை தேறும்

கல்வியில் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. வகுப்பறைகள் ‘ஸ்மார்ட்’ ஆகிக்கொண்டிருக்கின்றன. பயிற்றுவிக்கும் முறை ‘ஹைடெக்’ ஆகிக்கொண்டிருக்கிறது.;

Update: 2017-06-11 11:25 GMT
ல்வியில் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. வகுப்பறைகள் ‘ஸ்மார்ட்’ ஆகிக்கொண்டிருக்கின்றன. பயிற்றுவிக்கும் முறை ‘ஹைடெக்’ ஆகிக்கொண்டிருக்கிறது. ஆனால், அத்தகைய நவீன சூழலில் கல்வி பயிலும் மாணவிகளில் 60 சதவீதம் பேர் தங்கள் பள்ளியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துவதில்லை.

வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் சிறுமிகள், எத்தனை மணிநேரம் கழித்து சிறுநீர் கழிக்கிறார்கள் தெரியுமா? 10 முதல் 12 மணி நேரம் அடக்கிக் கொள்கிறார்கள். இயற்கை உபாதைகளை அடக்குவது ஆரோக்கியத்திற்கு பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தும், அடக்குவதை தவிர வேறுவழியில்லை என் கிறார்கள்.

நகரத்தில் உள்ள ஒரு பள்ளி. கீழ் பகுதியில் இரண்டு கழிப்பறைகள். மேல் மாடியிலும் இரண்டு கழிப்பறைகள். தேவைக்கு போதுமானவை. ஆனால், “பரவாயில்லைதான். ஆனால் கெட்டவாடை வீசும். அதனால் நான் உள்ளே செல்வதில்லை” என்கிறாள், ஒரு மாணவி.

அவளது தாயாரிடம் கேட்டால், “இவளை நினைத்து எனக்கு ரொம்ப பயம். மாதவிலக்கு நாட்களில்கூட அவள் பள்ளி கழிப்பறையை பயன்படுத்த மறுக்கிறாள். காலை ஏழரை மணிக்கு வீட்டில் இருந்து கிளம்புகிறாள். பள்ளி முடிந்து, டியூஷனுக்கும் போய்விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்புகிறாள். அவ்வளவு நேரம் சாதாரண சானிட்டரி நாப்கின் தாக்குப்பிடிப்பதில்லை. அதற்கென்று விசேஷமான ‘பிராண்ட்’டை தேடிப்பிடிக்கவேண்டியதிருக் கிறது” என்று கவலை கொள்கிறார்.

“கைகழுவும் இடத்தில் இருக்கும் சூழல் பிடிக்காததால், நான் மதிய உணவுக்கு சாத வகைகள் எதையும் எடுத்துச் செல்வதில்லை. ‘ஸ்நாக்ஸ்’ எதையாவது சாப்பிட்டுவிட்டு, கையை துடைத்துக்கொள்வேன்” என்கிறான், பதினொன்றாம் வகுப்பு மாணவன்.

சில மாணவிகள், உள்ளே போய்விட்டு வந்தால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சாப்பிட மனமிருக்காது என்கிறார்கள். மழைகாலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். அப்போதுதான் அடக்கி வைக்க முடியாமல் அதிக அவஸ்தைப்படுகிறோம் என்கிறார்கள்.



பல பள்ளிகளில் கழிப்பறை தூரத்தில், வேண்டப்படாத இடம்போல் கவனிப்பாரற்ற நிலையில் இருக்கிறது. டைல்ஸ் சுத்தமில்லாமல் இருக்கும். தண்ணீர் ஒழுகிக்கொண்டிருக்கும் அல்லது தண்ணீரே இல்லாமல் இருக்கும். பக்கெட், ‘மக்’ இருக்காது. மின்சாரம் இருக்காது. இருட்டாக தோன்றும். அதனால் பலரும், எப்போது வீட்டுக்கு ஓடலாம் என்ற மனநிலையிலே இருந்து கொண்டிருக்கிறார்கள்.

“சிறுநீர் கழிக்க விருப்பம் இல்லாததால் நிறைய மாணவிகள் தண்ணீர் பருகுவதில்லை. தண்ணீர் பருகாததாலும், இயல்பான நேரத்திற்கு சிறுநீர் கழிக்காததாலும் சிறுநீரகப் பாதை தொற்று முதல் சிறுநீரக பாதிப்பு வரை ஏற்படுகிறது. தேவையான அளவு தண்ணீர் பருகாவிட்டால் சில நோய்கள் வரும். அதுபோல் தேவையான நேரத்தில் சிறுநீர் கழிக்காவிட்டாலும் சில நோய்கள் உருவாகும். சிறுநீரை கஷ்டப்பட்டு அடக்கிக்கொள்வதால் நோய்ப் பாதிப்பிற்குள்ளாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அனைவருமே வீட்டில் சவுகரியமான, சுத்தமான கழிப் பறையை பயன்படுத்துகிறவர்கள்” என்கிறார், மருத்துவர்.

தங்கள் பிள்ளைகளுக்கான பள்ளியை தேர்ந்தெடுக்கும் பெற்றோர், அந்த பள்ளியின் வெற்றி சதவீதத்தை பார்க் கிறார்கள். வகுப்பறைகள் எப்படி இருக்கின்றன, போக்குவரத்து வாகன வசதி எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்க்கிறார்கள். எந்த பெற்றோரும் அந்த பள்ளியின் கழிப்பறை எப்படி பராமரிக்கப்படுகிறது என்று எட்டிப்பார்ப்பதில்லை. எத்தனை மாணவ- மாணவிகள் அங்கே படிக்கிறார்கள்? அவர்கள் தேவைக்கு தக்கபடி கழிப்பறைகள் இருக்கிறதா? என்றும் யாரும் கேட்பதில்லை. அரசு , மாணவர்கள் எண்ணிக்கைக்கு தக்கபடி எத்தனை கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கு வைத்திருக்கிறது. அது வெளிப்படையாக யாருக்கும் தெரிவதில்லை. அதை பெரும்பாலான பள்ளிகள் பின்பற்றுவதும் இல்லை.

பிரபலமான பள்ளி ஒன்றில் கழிப்பறை வாடை வகுப்பறை வரை வீசியது. அதனால் வகுப்பறை ஜன்னல் ஓரத்தில் இருந்த சிறுமி தனது பெற்றோரிடம் போய் சொன்னாள். பெற்றோர் அதை பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல, உடனே அவர்கள் அந்த ஜன்னலை அடைத்து விட்டார்கள். அதனால் காற்றோட்டம் இல்லாத அவஸ்தையை அந்த சிறுமி அனுபவிக்கவேண்டியதிருந்தது. பெற்றோர், கழிப்பறையை வாடை இல்லாத அளவுக்கு பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றுதான் நினைத்திருப்பார்கள். இப்படி காற்று வரும் ஜன்னலையும் அடைத்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இந்த மாதிரி எதிர்விளைவுகளும் சில நேரங்களில் உருவாகிவிடுகிறது.

‘தண்ணீர் பருகாவிட்டால் சிறுநீர் கழிக்கவேண்டியதில்லை’ என்று பெரும்பாலான மாணவிகள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். தண்ணீர் குடிக்காவிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதை அவர்கள் தெரிந்துவைத்திருக்கவில்லை. உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்வதற்கும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கும் கட்டாயம் தண்ணீர் பருகவேண்டும். தினமும் 8 கப் தண்ணீர் பருகினால்தான் உடல் இயக்கம் இயல்பாக நடக்கும். இல்லாவிட்டால் நோய்கள் பல வரிசைகட்டி வந்து உடலைத்தாக்கும்.

சிறுநீரை அடக்கிவைத்தால் பிறப்பு உறுப்பில் தொற்று, அடி வயிற்று வலி, தலைவலி, வாந்தி, தீராத ஜலதோஷம் போன்றவை தோன்றும். முதுகுவலி, படுக்கையில் சிறுநீர்கழித்தல், மனஅழுத்தம், மனோநிலை மாறுபாடுகள் போன்றவைகளும் தோன்றும்.

இந்த நிலை மாறினால்தான் இந்தியாவின் ஆரோக்கிய நிலை தேறும்! 

மேலும் செய்திகள்