வெண்ணிலாவும் மூன்று நட்சத்திரங்களும்

“நான் என்னவாக வேண்டும் என்று தீர்மானிக்கும் முன்னே ஆசிரியராகி விட்டேன். ஆசிரியரான பின்பும் அந்த பணியை ஏற்க மறுத்த மனதுடன்தான் இருந்தேன்.

Update: 2017-06-11 08:34 GMT
“நான் என்னவாக வேண்டும் என்று தீர்மானிக்கும் முன்னே ஆசிரியராகி விட்டேன். ஆசிரியரான பின்பும் அந்த பணியை ஏற்க மறுத்த மனதுடன்தான் இருந்தேன். பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் ஆசிரியப் பணியின் முக்கியத்துவம் எனக்கு புரிந்தது. பேருந்து வசதியில்லாத குக்கிராமம் ஒன்றில் உள்ள பள்ளியில் பணிக்கு சேர்ந்தேன். முதல்தலைமுறையாகப் பள்ளிக்கூட வாசலை மிதிக்கும் பிள்ளைகளை பார்த்தவுடன், ஆசிரியர்களின் கடமை உணர்வு எவ் வளவு முக்கியம் என்பது எனக்குப் புரிந்தது. சமூகம் ஓர் ஆசிரியரிடம் எதிர்பார்க்கும் அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றும் சூழல் இன்று ஒவ்வொரு ஆசிரியருக்கும் சவால் நிறைந்ததாக இருக்கிறது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நூறு சதவீதம் மனநிறைவோடு பணியாற்றிய சூழல் இன்று இல்லை. மதிப்பெண்களின் பின்னால் மாணவர்களோடு சேர்ந்து நாங்களும் ஓடிக்கொண்டிருக்கிறோம்”

அரசுப் பள்ளி ஆசிரியையான கவிஞர் அ.வெண்ணிலா மேற்கண்டவாறு ஆதங்கப்பட்டாலும், அவர் அருமையான செயல் ஒன்றை செய்து, அரசுப் பள்ளிகளை நோக்கி அனைவரது பார்வையும் திரும்பும்படி செய்திருக்கிறார்.

அ.வெண்ணிலா- மு.முருகேஷ் தம்பதிகளுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் கவின்மொழி. அடுத்து இரட்டையர்கள் நிலாபாரதி, அன்புபாரதி. மூத்தமகளை பள்ளி இறுதிப் படிப்பிற்கு அரசுப் பள்ளியில் சேர்த்தார்கள். தற்போது அவர் கோவை விவசாய கல்லூரியில் இளங்கலை வேளாண்மை படித்து வருகிறார். அடுத்து இரட்டையர்களையும் தனியார் பள்ளியில் இருந்து 11-ம் வகுப்புக்கு வந்தவாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தார்கள். சமீபத்தில் வெளியான ‘பிளஸ்-டூ’ தேர்வு முடிவில் நிலா பாரதி 1169 மதிப்பெண் பெற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவிகளில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். அன்புபாரதி 1165 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இரட்டையர்கள் முதல் இரண்டு இடங்களையும் பிடித்துக் கொண்டார்கள்.

வெண்ணிலாவின் இந்த முயற்சி பாராட்டுகளையும், சமூக அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது. இவரை தொடர்ந்து 3 ஆசிரியைகள் தங்கள் மகள்களையும் அரசுப் பள்ளியில் சேர்க்க, மளமளவென்று அந்த பள்ளியில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. மூன்று ஆண்டுகளில் மேனிலைக் கல்வியில் கூடுதலாக 200 மாணவிகள் சேர்ந்திருக்கிறார்கள்.

“முறையான பயிற்சியும், தகுதியும், அனுபவமும் கொண்ட ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில்தான் இருக்கிறார்கள். அங்கு பயிலும் மாணவிகளுக்கு இறுக்கமில்லாத, சுதந்திரமான கல்வி கிடைக்கிறது. அதனால் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் ஆளுமைத் திறன்மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள்” என்று கூறும் கவிஞர் வெண்ணிலாவிடம் நமது உரையாடல்!

“நான் வந்தவாசி அருகில் உள்ள அம்மையப்பட்டு கிராமத்தில் பிறந்தேன். தந்தை சி.அம்பலவாணன், தாயார் வசந்தா. அவர்களுக்கு நான் ஒரே மகள். ஐந்தாம் வகுப்பு வரை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் ஆசிரியர் பயிற்சி வரை வந்தவாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கற்றேன். இன்று நான் அதே பள்ளியில்தான் பணியாற்றுகிறேன். நான் படித்த காலம் இனிமையானது. மதிப்பெண் வாங்கியே ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இருந்ததில்லை. பள்ளிக்கு போவோம், வருவோம். ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விருப்பப்படி கவனிப்போம். தேர்வுக்கு முந்தைய நாட்களைத் தவிர்த்து நான் வீட்டில் புத்தகம் எடுத்து பத்து நிமிடத்துக்கு மேல் படித்ததில்லை. ஆனால் என் விருப்பத்திற்குரிய வரலாற்று ஆசிரியர் தவமணி சாரும், சுந்தரி டீச்சரும் நடத்திய பாடங்கள் பசுமையாக மனதில் இருக்கின்றன. அது திணிக்கப்படாத பாடம் என்பதால் இன்றும் மனதில் இனிக்கிறது”

உங்களை கவிஞராக அறியப்படும் சூழல் எப்போது, எப்படி உருவானது?

“நான் கவிஞராக அறியப்பட்டது இருப்பத்தைந்து வயதிற்கு மேல் தான். அதுவரை வாசிப்பின் வசம் இருந்த நான், தாமதமாகவே கவிதைகள் எழுதத் தொடங்கினேன். நான் பெரியாரை படித்து வளர்ந்ததால்தான் கவிஞரானேன். ஆறு கவிதை தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கடிதத் தொகுப்பு போன்றவைகளையும் படைத்திருக்கிறேன். தமிழகத்தின் ஆகச் சிறந்த ஆளுமைகள் 14 பேரின் நேர்காணல்கள் அடங்கிய நூல் ஒன்றையும், பதிப்பாசிரியராக சில நூல்களையும் உருவாக்கியிருக்கிறேன்”

ஆசிரியப் பணி நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டதா?

“நான் ஆசிரியரானதுக்கு காரணம், என் அப்பா. அவருக்கு என்னை நிறைய படிக்க வைக்கும் ஆர்வம் இருந்தாலும், குடும்ப சூழல் காரணமாக, பத்தாம் வகுப்பு முடித்தவுடன் ஆசிரியர் பயிற்சிக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் என்னவாக வேண்டும் என்று தீர்மானிக்கும் வயது வரும் முன்னே ஆசிரியராகி விட்டேன். தொடக்கத்தில் சில தயக்கங்கள் இருந்தாலும், பின்பு முழுமனதோடு, பக்குவத்தோடு பயிற்றுவிக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறேன்”

நீங்கள் முதலில் என்ன காரணத்திற்காக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தீர்கள்?

“மழலையர்ப் பள்ளியில் அவர்களை சேர்க்கும் வயது வந்தவுடன் நல்ல அரசுப் பள்ளிகளைதான் தேடினோம். நல்ல என்பதற்கு பள்ளி களின் உட்கட்டமைப்பை முதல் தேவையாக கருதினோம். கல்வியைவிட குழந்தைகளுக்குப் பிடித்த நட்பு வட்டமும், அவர்களுக்கான மகிழ்ச்சியான பள்ளி அனுபவமும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம். அதற்கு தனியார் பள்ளிகளைத் தவிர வேறு வழியில்லை என்பது எங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஆனால் தனியார் பள்ளிகள் எங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. அவர்கள் குழந்தைகளை நடத்தும் விதங்களை பார்த்து மனங்கசந்தோம். பள்ளிக்கே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கலாமா என்றெல்லாம்கூட யோசித்தோம். எல்லாம் கடந்து துணிந்து ஒரு முடிவு எடுக்க பத்தாண்டுகள் ஆனது. பிள்ளைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மோசமான நடுத்தர மனோபாவமே நாங்கள் எங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க அடிப்படையான காரணமாக இருந்தது என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்”



10-ம் வகுப்பு முடிந்த பின்பு அரசு பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

“அவர்களின் ‘பிளஸ்-டூ’ கல்வியை நினைத்துப் பார்த்தபோது ஆசிரியரான எனக்கே பயமும், மிரட்சியும் ஏற்பட்டது. குறுகிய காலத்திற்குள் படிக்க வேண்டிய கடினமான பாடப்பகுதிகள், எவ்வளவு படித்தாலும் போதாது என்ற சூழல், சிறு தவறுகளுக்குக் கூட குறைக் கப்படும் மதிப்பெண்கள், இருநூறுக்கு இருநூறு எடுத்தால்தான் வாழவே முடியும் என்ற அச்சுறுத்தல்.. எல்லாமே என்னை கலங்கடித்தது. பிள்ளைகளை அவ்வளவு பெரிய நெருப்பாற்றில் நீந்த விட நான் தயாராக இல்லை. திறமையான ஆசிரி யர்களை கொண்ட, அரசுப் பள்ளியிலேயே சேர்த்து நெருக்கடி இல்லாமல் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதை என் பிள்ளைகள் ஒத்துழைப்போடு செய்தேன்”

ஒருவேளை தனியார் பள்ளியிலே தொடர்ந்து படித் திருந்தால், மதிப்பெண் இதை விட குறைந் திருக்குமா, அதிகரித்து இருக்குமா?

“நிச்சயமாக கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள். ஆனால் அதற்கு அவர்கள் தங்கள் வாழ்வின் இரண்டாண்டுகளை இழந் திருக்க வேண்டும். என்னுடைய மகள்கள் தங்களின் எந்த இயல்பும் மாறாமல் மற்ற வகுப்புகளை கடப்பது போலவே பனிரெண்டாம் வகுப்பையும் கடந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் அரசுப் பள்ளி. நான் பணிபுரியும் பள்ளியிலேயே என் மகள்கள் படித்ததால், மற்ற குழந்தைகள் போன்று அவர் கள் மீதும் தனிக்கவனம் செலுத்த முடிந்தது”

மற்றவர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்கு நீங்கள் முன்வைக்கும் காரணங்கள் என்னவாக இருக்கும்?


“பெற்றோர்களின் பலகீனமே தனியார்ப் பள்ளிகளின் முதலீடு. தங்களை விட தங்கள் பிள்ளைகள் உயர்ந்து விட வேண்டும் என்பதே பெற்றோர்களின் கனவு. கனவை அடைய அவர்கள் நம்புவது வெறும் மதிப்பெண்களை. இந்த பலகீனத்தால் கல்வி இன்று அதிக மதிப்புகொண்ட வியாபாரப் பொருளாகி விட்டது. கல்வியை காசு கொடுத்து வாங்கும் மாணவன் சமூகத்திற்கு என்ன செய்வான்? காசு கொடுத்து வாங்கும் கல்வி, மதிப்பெண்களைப் பெற்றுத் தந்திருக்கும். ஆனால் தன்னுடைய சமூகம், நாடு என்ற எந்த அக்கறையும் இல்லாத இயந்திரமாகிவிடுவான். அப்போது மிகப் பெரிய மனிதகுல வீழ்ச்சியை சமூகம் சந்திக்க நேரிடும். அதை தடுக்க நினைக்கும் எல்லா நாடுகளும், தம் மக்களுக்குத் தரமான கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக கொடுக்க வேண்டும். அரசு கொடுக்கும் கல்வியின் மூலமே, இந்த நாட்டிற்கு நல்ல குடிமகன்கள் கிடைப்பார்கள்”



இரட்டையர்கள் அடுத்து அரசு கல்லூரியில்தான் படிப்பார்களா?

“நிச்சயமாக அரசுக் கல்லூரியில் தான் சேருவார்கள். அரசுக் கல்லூரிகளில் இடம் பிடிக்கத்தானே மாணவர்கள் சிறுவயதில் இருந்தே தனியார் பள்ளிகளின் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள் கிறார்கள். பனிரெண்டாம் வகுப்பு வரை தனியாரிடம் பணத்தை கொட்டிக் கொடுத்து விட்டு உயர் கல்விக்கு வரும் போது அரசுக் கல்லூரிகளை நாடி வருகிறார்கள். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் உயர் கல்வியில் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் அருகாமையில் உள்ள தனியார் கல்லூரிக்குச் செல்கிறார்கள். பணம் கட்ட வசதியில்லையெனில் அத்துடன் படிப்பை நிறுத்திக் கொள் கிறார்கள். தமிழகக் கல்வியின் பெரும் முரண்பாடு இது. இரட்டையர் இருவரும் மருத்துவம் சேர விருப்பம் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு மருத்துவ படிப்பின் நிலையை கணிக்க முடியாததால், மதிப்பெண் எடுத்தும் அதை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மூன்றும் பெண்கள் ஆனதால் நாங்கள் அவர்களது அன்பில் கட்டுண்டு அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். அவர்கள் எங்கள் வீட்டு இளவரசிகளாக வலம் வருகிறார்கள்” என்று தாய்மையில் பெருமிதம் கொள்கிறார், கவிஞர் வெண்ணிலா. இவர் தொடர்ந்து பயின்று பல்வேறு பட்டங்கள் பெற்றதோடு, ‘தேவதாசிகளின் கலைத்திறனும் ஆளுமையும்’ என்ற தலைப்பில், தஞ்சை தமிழ்ப்பல் கலைக்கழகத்தில் முனைவருக்கான ஆய்வினை நிறைவு செய்திருக்கிறார். பி.எச்டி. பட்டம் பெற உள்ளார்.

இவர்களது மகள்கள் மூவரும் சிலம்பக் கலையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் பெற்றிருக்கிறார்கள். 

மேலும் செய்திகள்