கடல் நீரில் விவசாயம்

வரலாற்றுச் சிறப்பு பெற்ற நம் தமிழகம், நாட்டிலேயே வேளாண்மையில் சிறப்புள்ள மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்துள்ளது.

Update: 2017-06-11 06:56 GMT
ரலாற்றுச் சிறப்பு பெற்ற நம் தமிழகம், நாட்டிலேயே வேளாண்மையில் சிறப்புள்ள மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்துள்ளது.

ஆனால், தற்போது நிலவும் வரலாறு காணாத வறட்சியால் தமிழகம் விவசாயத்தில் மிகவும் வளர்ச்சியின்றி பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதில் இருந்து நமது விவசாயத்தை முன்னெடுத்துச்செல்ல இன்றைய இளைஞர்கள் இணைந்து புதிய தொழில்நுட்பத்தைக் கையெடுத்துச் செயல்பட்டால்தான் சாதிக்க முடியும்!

உலகத்தில் உள்ள மொத்த தண்ணீரில் 97 சதவீதம் கடல் நீர், மீதம் உள்ள 3 சதவீதம்தான் நல்ல நீர்.

இந்த 3 சதவீத நல்ல நீருக்குத்தான் நாம் அனைவரும் சண்டை போட்டுக் கொள்கிறோம்.

ஆனால் 97 சதவீதம் உள்ள கடல் நீரை நாம் ஏன் விவசாயத்திற்குப் பயன்படுத்தக் கூடாது?

முடியுமா? என்பதற்கு முடியும் என்று சொல்வது மட்டுமின்றி, சாதித்தும் காட்டுகின்றனர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடற்கரை ஓரம் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதைச்செய்து காட்டமுடியும். குறிப்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கடல் நீரில் விவசாயம் செய்யமுடியும் என்று சாதித்துக்காட்டியுள்ளனர்.

உவர் நிலத்திலிருந்து உப்புத்தன்மையை அதிகம் உறிஞ்சி எடுத்து நல்ல விளைநிலமாக மாற்றும் அபூர்வ தாவரம் உள்ளது என்பதை அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடித்துள்ளனர்.

கடற்கரை ஓரங்களிலும், ஆறு கடலுடன் கலக்கும் முகத்துவாரங்களிலும் சேறு கலந்த சதுப்பு நிலங்களிலும், உப்பு நீரில் வளரக்கூடிய ஒருவகை தாவரக் கூட்டங்களே சதுப்பு நிலக்காடுகள்.

இந்தக் காடுகள் ஆங்கிலத்தில் “மாங்குரோவ்” என்று அழைக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு கோவிலிலும் ஸ்தல விருட்சம் எனப்படும் கோவில் மரம் உண்டு. இம்மரங்கள் புனிதத்தன்மை உள்ளனவாகக் கருதப்படுகின்றன.

இந்த சதுப்பு நிலக்காட்டு மரவகைகளில் ஒன்றான தில்லை மரம், மிகவும் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது என்பது சிறப்பு. இதன் காரணமாகவே அப்பகுதி தில்லைவனம் என்றழைக்கப்படுகிறது.

இந்த சதுப்பு நிலக்காட்டின் (மாங்குரோவ்) மரத்தின் மரபணுவை எடுத்து உயிரியல் தொழில் நுட்ப உதவியுடன் புதிய வகை உப்பு சக்தியைத் தாங்கக்கூடிய நெல்லை கண்டுபிடிக்க முடியும். இதனால் இந்த ரக நெல் மட்டுமின்றி பல வகையான தாவரங்கள் கடல் நீரில் வளரும்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உவர்நீர் தாவர மரபணு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே முதல் ஹலோபைட் மரபணு பூங்கா தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் ஹலோபைட் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஹலோபைட் தாவரம் உப்பு - எதிர்ப்பு அல்லது உப்பு சகிப்புத்தன்மை உள்ளவை ஆகும். இந்தத் தாவரத்தில் இருந்து பல நல்ல பயன்கள் கிடைக்கின்றன.

70 சதவிகித உப்பை எடுக்கும் சக்தி அதிகம் திறன் இருக்கும் ஓர்புடு என்ற செடி உப்பு அதிகம் இருக்கும் மண்ணில்தான் விளைகிறது. இது மட்டுமின்றி சதுப்பு நிலக்காடுகளின் பயன்கள், சதுப்பு நிலக்காடுகள் நமக்கு மதிப்பிலடங்காத நன்மைகளையும், பயன்களையும் தருகின்றன.

நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பொக்காளி நெல் ரகத்தை கடல் நீரில் பயிரிட்டு உள்ளனர். இதுபோன்ற நெல் ரகங்களை மீண்டும் பயிர் செய்தால் நமது விவசாயிகளுக்கு மிகவும் பயன்உள்ளதாக அமையும்.

விவசாயம் செய்யக்கூடிய மொத்த நிலங்களில் 60 சதவீத நிலம் மழையை எதிர்பார்த்துதான் உள்ளது. தமிழ்நாடு தண்ணீரின்றி இருக்கும் இந்த நிலையில் இன்றைய இளைஞர்கள் கடல் நீரைப் பயன்படுத்தி ஏன் விவசாயம் செய்து சாதனைகளைச் செய்து காட்டக் கூடாது?.

-டாக்டர் என்.பரசுராமன், முதன்மை விஞ்ஞானி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம் 

மேலும் செய்திகள்