புதுச்சேரியில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா? அமைச்சர் கந்தசாமி அதிரடி ஆய்வு

புதுவையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து அரிசிக் கடைகளில் அமைச்சர் கந்த சாமி அதிரடி ஆய்வு நடத்தினார்.

Update: 2017-06-10 23:45 GMT
புதுச்சேரி,

சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் அரிசி தற்போது இந்தியாவிற்குள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்திலும் இதுதொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும். பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அமைச்சர் ஆய்வு

இந்தநிலையில் அமைச்சர் கந்தசாமி அதிகாரிகளுடன் சென்று நேற்று காந்தி வீதியில் உள்ள அரிசிக் கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினார். கடை கடையாக சென்ற அவருடன் குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலாளர் சுந்தரவடிவேலு, இயக்குனர் பிரியதர்ஷினி, உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் ஆகியோரும் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கடைகளிலும், அரிசி குடோன்களிலும் இந்த ஆய்வு நடந்தது. சில கடைகளில் இருந்த அரிசியை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.

இந்த ஆய்வு குறித்து அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

புதுவையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் விதமாக அரிசிக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்ற கலப்பட அரிசி விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவுப்பொருட்களில் கலப்படம் செய்பவர்களை சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம். கலப்பட அரிசி விவகாரம் தொடர்பாக அரிசி ஆலை அதிபர்களையும் அழைத்து பேசுவோம். கலப்பட அரிசி தொடர்பான புகார்களை 18004251084, 0143-2272347 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கலப்படம் இல்லை

தற்போது சேகரிக்கப்பட்டுள்ள அரிசி மாதிரிகள் ஆய்வுக்கூடத்தில் பரிசோதிக்கப்படும். பாலில் கலப்படம் தொடர்பாக பரிசோதிக்கப்பட்டது. ஆனால் புதுவையில் மற்ற மாநிலங்களைப்போல் கலப்படம் எதுவும் செய்யப்படுவதில்லை.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

மேலும் செய்திகள்