காந்திவிலி காட்டுப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

காந்திவிலி காட்டுப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2017-06-10 22:46 GMT
மும்பை,

காந்திவிலி காட்டுப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்காதல்

மும்பை, காந்திவிலி ஜானுபாடா பகுதியில் உள்ள ஆதிவாசிபாடாவில் வசித்து வந்தவர் கிருஷ்ணன் (வயது35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த நீலம்(21) என்ற இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சமீபத்தில் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. 2 பேரையும் குடும்பத்தினர் கடுமையாக கண்டித்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்ற நீலம் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தம்பி நீலத்தை தேடி அலைந்தார். இந்தநிலையில் வீட்டருகே உள்ள காளி கோவில் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் ஆண், பெண் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.

தற்கொலை

இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது தனது அக்காள் நீலம், கள்ளக்காதலன் கிருஷ்ணனுடன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்தநிலையில் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கள்ளக்காதல் ஜோடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தங்களது கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிந்ததால் அவமானம் தாங்க முடியாமல் இருவரும் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்