மராட்டியத்தில் பரவலாக மழை: சோலாப்பூரில்,ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சோலாப்பூரில் ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி ஆனார்கள்.

Update: 2017-06-10 22:42 GMT
மும்பை,

மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சோலாப்பூரில் ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி ஆனார்கள். அகமதுநகரில் வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

பரவலாக மழை

வானிலை ஆய்வு மையம் 10-ந்தேதி முதல் மராட்டியத்தில் மழைக்காலம் தொடங்கும் என அறிவித்து இருந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொங்கன் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதேப்போல மும்பை, தானேயிலும் கடந்த 2 நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று காலை மும்பையின் மேற்கு புறநகர் பகுதியில் சுமார் 30 நிமிடம் மழை பெய்தது. இதனால் மும்பையில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

4 சிறுவர்கள் பலி

சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூர், சந்திரபாக் பகுதியில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள ஏரி நிரம்பியது. அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த தீரஜ்(வயது8), சுனில்(6), கணேஷ்(8), சவுரப்(6) ஆகிய 4 சிறுவர்கள் ஏரியில் குளிக்க வந்தனர். அவர்கள் தண்ணீரில் இறங்கி ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, துரதிருஷ்டவசமாக சிறுவர்கள் 4 பேரும் ஏரியில் மணல் கொள்ளையர்களால் தோண்டப்பட்ட குழியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதைக்கண்டு பதறிப்போன அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் குதித்து சிறுவர்கள் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 4 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளத்தில் வாலிபர்...

இதேப்போல நேற்று அகமதுநகர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள நேவாசா, மாருநகர் பகுதியில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை தாண்டி வெள்ளநீர் ஓடியது. அந்த பாலத்தை கடந்து செல்ல முயன்ற அக்‌ஷய்(23) என்ற வாலிபர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் போலீசார், தீயணைப்புப்படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

தானேயில் கடந்த 24 மணி நேரத்தில் 77.50 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கல்வா, மும்ரா உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மழைக்கால முன்எச்சரிக்கை பணிகள் முறையாக செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தானேயில் கடந்த 24 மணி நேரத்தில் 10 மரங்கள் வேரோடு சரிந்து உள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது.

மேலும் தானே மாவட்டம் பிவண்டி சேலார் பகுதியில் உள்ள தனியார் துணி ஆலை கட்டிடத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்