திருத்தணி அருகே திருமணமான 5–வது நாளில் இளம்பெண் தற்கொலை
திருத்தணி அருகே திருமணமான 5–வது நாளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.;
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த செருக்கனூர் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 27). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அரக்கோணத்தை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த பழனி என்பவரின் மகள் பத்மா (24) என்பவருக்கும் கடந்த 5–ந்தேதி திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகையில் திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று பத்மா திடீரென பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
தற்கொலை
இதை அறிந்த உறவினர்கள் பத்மாவை உடனடியாக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பத்மாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பத்மா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
இது குறித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் இது தொடர்பாக திருத்தணி ஆர்.டி.ஓ. விமல்ராஜ் விசாரித்து வருகிறார்.