செங்குன்றம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
செங்குன்றம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்,
செங்குன்றம்–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புள்ளிலைன் ஊராட்சி அருகே இருந்த மதுக்கடை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அகற்றப்பட்டது. அந்த கடை, செங்குன்றம்–கும்மனூர் சாலையில் தீர்த்தகரையாம்பட்டு பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
அப்போது அங்கு மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்த்தகரையாம்பட்டு பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அந்த மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
சாலை மறியல்
ஆனால் அந்த மதுக்கடை மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தீர்த்தகரையாம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 150–க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று மதியம் அந்த மதுக்கடை அருகே செங்குன்றம்–கும்மனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
முன்னதாக மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் உதவி கமிஷனர்கள் ஜெயசுப்பிரமணியன், லிங்கதிருமாறன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சுரேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 200–க்கும் மேற்பட்ட போலீசார் கடை அருகே குவிக்கப்பட்டு இருந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகும்படி கூறினர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. இதனால் மாதவரம் தாசில்தார் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், இன்னும் ஒரு வாரத்தில் அந்த மதுக்கடை மூடப்படும் என உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், 3 மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பா.ம.க. முற்றுகை போராட்டம்
சென்னை கொடுங்கையூர் காமராஜர் நகர் திருவள்ளூர் சாலையில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. தேவாலயம், பள்ளிக்கு அருகில் திறக்கப்பட்டு உள்ள அந்த மதுக்கடையை மூடக்கோரி வடசென்னை மாவட்ட பா.ம.க. செயலாளர் வெங்கடேச பெருமாள் தலைமையில் பகுதி செயலாளர் சந்தானம் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் மதுக்கடை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.