ஆர்.கே.பேட்டை அருகே சரக்கு ஆட்டோவில் சிக்கி குழந்தை பலி

சரக்கு ஆட்டோவில் சிக்கி குழந்தை பரிதாபமாக இறந்தது. வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-06-10 22:10 GMT
பள்ளிப்பட்டு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டையை அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் கிராம விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்னை கோயம்பேடு சந்தையில் விற்று வருகிறார். சம்பவத்தன்று இவர் பைவலசா கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் காய்கறிகளை வாங்கினார்.

அதன்பிறகு அவற்றை சென்னைக்கு சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ரகு என்பவரது மகள் ஷாலினி (2) தனது வீட்டின் முன்னால் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது காய்கறி ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவில் சிக்கி ஷாலினி அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனாள்.

டிரைவருக்கு வலைவீச்சு

இந்த விபத்தை கண்டதும் சேகர் சரக்கு ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டார். இந்த விபத்து குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேகரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மற்றொரு விபத்து

கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் சின்னகாலனியை சேர்ந்தவர் பட்டாளம் (50). நேற்று அதிகாலை 4¾ மணியளவில் தனது சைக்கிளில் கல்பாக்கம் நோக்கி கிழக்குகடறுகரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ், சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பட்டாளம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 இது குறித்து தகவறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்