செம்பரம்பாக்கம் ஏரியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் 5 கண் மதகு பகுதியில் சென்னை பெருநகர போலீசார், தனியார் கல்லூரி, பள்ளி சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பூந்தமல்லி,
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வார்தா புயல் காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் காஞ்சீபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள ஏராளமான மரங்களும் முறிந்து விழுந்தன. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் 5 கண் மதகு பகுதியில் சென்னை பெருநகர போலீசார், தனியார் கல்லூரி, பள்ளி சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதற்கு போரூர் உதவி கமிஷனர் கண்ணன் தலைமை தாங்கினார். சென்னை பெருநகர போலீஸ் இணை கமிஷனர்கள் சந்தோஷ்குமார், பவானீஸ்வரி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.பழனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள்.
பின்னர் மாணவர்கள் போலீசாருடன் சேர்ந்து 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர். செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தினமும் 2 லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றப்படும் என்றும் இந்த மரக்கன்றுகள் வளரும் வரை தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.