மோடி அரசின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி சரத்பவார் சொல்கிறார்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறினார்.;

Update: 2017-06-10 22:06 GMT

மும்பை,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறினார்.

கொண்டாட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் நேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியதாவது:–

மோடி தலைமையிலான மத்திய அரசு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டங்களையே தற்போது நடைமுறைக்கு கொண்டு வருகிறது. புதிதாக ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக ஆதார், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை கடந்த ஆட்சியின் திட்டங்கள் ஆகும்.

பிரதமர் மோடி வெளிநாட்டில் வழங்கிய உரையின் போது தற்போது உலக அளவில் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளதாக கூறுகிறார்.

சிறுபான்மையினர் மீது தாக்குதல்

இவ்வாறு பேசுவதற்கு முன் அவர் ஒருங்கிணைந்த நாடுகள் வழங்கிய அறிக்கையை கொஞ்சம் படித்து பார்க்கவேண்டும். அதில் நமது நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க முடியாமல் அரசு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் விவசாயத்தில் போதிய வளர்ச்சி இல்லாததால் பொருளாதாரம் விழுந்துவிட்டது. போதிய முதலீடு இல்லாததால் வேலைவாய்ப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துவிட்டது. தற்போதைய அரசு வரவேற்க தகுதியில்லாததாகவும், மக்களின் அதிருப்தியையும் சம்பாதித்து வருகிறது.

இவ்வாறு சரத்பவார் கூறினார்.

மேலும் செய்திகள்