நவிமும்பையில் மாநகராட்சி பஸ் டிரைவர், கண்டக்டர் மீது கொலை வெறி தாக்குதல் 2 ஆட்டோ டிரைவர்கள் கைது

நவிமும்பையில் மாநகராட்சி பஸ் டிரைவர், கண்டக்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 2 ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-06-10 23:30 GMT

மும்பை,

நவிமும்பையில் மாநகராட்சி பஸ் டிரைவர், கண்டக்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 2 ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ரோட்டில் ஆட்டோக்கள்...

நவிமும்பை, கன்சோலி பகுதியில் உள்ள ஒரு ரோட்டில் நேற்று முன்தினம் மாலை நவிமும்பை மாநகராட்சி பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அங்கு பஸ் செல்ல முடியாத வகையில் சாலையை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் பஸ் டிரைவர் சாலையில் இருந்த ஆட்டோக்களை ஓரமாக விடுமாறு ஹாரன் அடித்தார்.

இதனால் அங்கு நின்ற ஆட்டோ டிரைவர்களும், பஸ் டிரைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கொலைவெறி தாக்குதல்

இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். பஸ் டிரைவர், கண்டக்டர் தாக்கப்படுவதை ரோட்டில் நின்று ஒருவர் செல்போனில் படமெடுத்தார். அந்த வீடியோவில் ஆட்டோ டிரைவர் பஸ் டிரைவர் மீது சைக்கிளை தூக்கி வீசுவது, தாக்கியதில் அவர் சுருண்டு ரோட்டில் விழுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

இந்த காட்சிகள் சமூகவலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

2 பேர் கைது

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி பஸ் டிரைவர், கண்டக்டர் கன்சோலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜூ அதவாலே, தாதா நார்டேக்கர் ஆகிய 2 ஆட்டோ டிரைவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 ஆட்டோ டிரைவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்