சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கும் பணி சிக்கராயபுரம் கல்குவாரியில் அமைச்சர் வேலுமணி ஆய்வு
சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கும் பணியை அமைச்சர் வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.
பூந்தமல்லி,
மழை இல்லாத காரணத்தால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகள் வறண்டன. இதனால் சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடாக சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்த குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்தது.
முதல் கட்டமாக மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள 25–க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் தேங்கி உள்ள மழை நீரை எடுத்து உபயோகிக்க முடிவு செய்யப்பட்டது. கல்குவாரியில் உள்ள தண்ணீரை ஆய்வு செய்ததில் அது குடிநீருக்கு உகந்தது என தெரியவந்தது.
இதையடுத்து சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து செம்பரம்பாக்கம்
ஏரி அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் முதல் 19–வது குவாரியில் இருந்து தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர்
சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்து சென்று சுத்தி
கரிக்கப்பட்டு சென்னை
நகர மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
அமைச்சர் ஆய்வு
தண்ணீர் அதிகம் உள்ள 8–வது குவாரியில் 450 எச்.பி. திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்த உரிய இடம் இல்லாததால் அங்கு சுமார் 15 டன் எடை கொண்ட மிதவையில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு அதன் மூலம் தண்ணீர் எடுக்கப்பட உள்ளது. தண்ணீரை வெளியே கொண்டு வரும் குழாய்களும் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணிகளை நேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நிருபர்களிடம் கூறியதாவது:–
63 சதவீதம் மழை குறைவு
145 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. தற்போது 63 சதவீதம் மழை குறைந்து உள்ளது. சுனாமி, தானே, வார்தா புயலின் போதும், கடுமையான வறட்சி வந்தபோதும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்தது.
தற்போது சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க கல்குவாரிகளில் இருந்து நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ரூ.13.63 கோடியில் செயல்படுத்தப்பட்டு உள்ள இந்த பணிகள் 30 நாட்களில் முடிக்கப்பட்டு உள்ளது. இந்த ராட்சத மோட்டாரின் பம்பு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இது சரித்திர சாதனை திட்டமாகும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 100–க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.
தூர்வாருவது ஏன்?
தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறு போடப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மதத்தினரும் மழை வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர். எனவே விரைவில் மழை வரும் என்று நம்புவோம்.
மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி அமைத்து இருந்தது. அப்போது எல்லாம் ஏரி, குளங்களை தூர்வாராமல் இப்போது ஏன் தூர் வாருகிறார்கள்?. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் திட்டங்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன. ஒவ்வொரு திட்டமாக வகுத்து அவர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இந்த நல்ல பெயர் ஆளும் கட்சிக்கு கிடைக்கிறது என்பதால் மு.க.ஸ்டாலின் ஏரி, குளங்களை மேலோட்டமாக மரம், செடிகளை அகற்றி தூர் வாருகிறார்.
செம்பரம்பாக்கம் ஏரி
இங்கு ஏக்கர் கணக்கில் இவ்வளவு பெரிய செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. அதில் அவர் கேட்கும் பகுதியை நாங்கள் ஒதுக்கி தருகிறோம். அதனை அவர் தூர்வாரி காட்டட்டும் பார்க்கலாம். தொலைக்காட்சி, பத்திரிகைகளில் தினமும் செய்தி வர வேண்டும் என்பதற்காக அவர் இதுபோல் செய்கிறார். தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது இதுபோன்ற பணிகளை செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் அமைச்சர் பெஞ்சமின், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, பழனி எம்.எல்.ஏ., சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அருண்ராய் உள்ளிட்ட பலர் இருந்தனர்.