மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருக்கிறேன்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருக்கிறேன் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
பேரையூர்,
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால், எனது பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
பூமி பூஜைமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் தார்சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை மாவட்டத்தில் மக்களின் தேவை அறிந்து திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறோம்.
எய்ம்ஸ் மருத்துவமனை2014–ல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒரே பகுதியில் 217 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதை 2015–ல் மத்திய குழு ஆய்வு செய்தது.
தென்மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு பெருந்துறை, மதுரை, ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது.
அதில் மதுரையில் அமைவதற்கு பெரும் முயற்சி செய்து வருகிறோம். மற்ற இடங்களில் உள்ள மக்களுக்கும் நல்ல மருத்துவ சேவை கிடைக்க பாடுபடுவோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முழுமையாக பாடுபடுவோம் அதற்காக எனது பதவியை தியாகத்துடன் ராஜினாமா செய்ய உறுதியாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ.பேட்டியின் போது அருகில் இருந்த திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஏ.கே.போஸ் கூறுகையில், “தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால், மாவட்டத்திலுள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம்“ என்றார்.
அதற்கு நிருபர்கள், எதிர்க்கட்சி (தி.மு.க.) எம்.எல்.ஏ.க்களும் மாவட்டத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டதற்கு, “அவர்களிடமும் சென்று எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்துவோம்“ என்று கூறினார்.