ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுக்குழுவில் தீர்மானம்

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-06-10 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முக ராஜன், துணை தலைவர் சண்முகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பள்ளி கல்வி துறையில் இணை இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர், அலுவலக மேலாளர் உள்ளிட்ட பதவிகளை உருவாக்கவேண்டும். விலையில்லா பொருட்களை பள்ளிகளுக்கு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் அலுவலக பணியாளர்களின் உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி இருப்பதால் வேறு முகமை மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தும்படி கேட்டுக்கொள்வது. அமைச்சு பணியாளர்களுக்கு தேர்வு பணியில் இருந்து முழுவதுமாக விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்வது.

காலி பணியிடங்கள்

55 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு முறையான கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆய்வக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு பெறுவதில் உள்ள தடையை நீக்கி தொடர்ந்து பதவி உயர்வு பெறுவதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும். அதிக பள்ளிகள் கொண்ட கல்வி மாவட்டங்களை இரண்டாக பிரித்து போதிய பணியிடங்களுடன் புதிய கல்வி மாவட்ட அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும். அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பிட அரசாணை பிறப்பிக்க வேண்டும். நேரடி உதவியாளர் நியமனத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் துரைப்பாண்டி உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்