தடைசெய்யப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மயிலாடுதுறையில் தடை செய்யப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2017-06-10 22:45 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் தஞ்சை நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் காளிமுத்து ஆலோசனையின் பேரில் நாகை மாவட்ட நியமன அலுவலர் ரவி, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் மேற்பார்வையில் நகர் பகுதியில் உள்ள குடோன்கள், கடைகளில் திடீர் ஆய்வு நடைபெற்றது.

அப்போது வண்டிக்காரத்தெரு, காந்திஜிசாலை ஆகிய இடங்களில் உள்ள மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் 50 மைக்ரானுக்கு குறைவான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனையிட்டனர். அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்று கூறப்படுகிறது. பின்னர் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவழகன், துப்புரவு ஆய்வாளர்கள் ராமையன், பழனிவேல், பிச்சமுத்து, பார்த்தசாரதி ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அழித்தனர்.

பிளாஸ்டிக் அரிசி

இதேபோல் மயிலாடுதுறையில் உள்ள அரிசி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? எனவும், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? எனவும் மாவட்ட நியமன அலுவலர் ரவி, உணவு பாதுகாப்பு அலுவலர் முத்தையன் ஆகியோர் சோதனையிட்டனர். இதில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்காக கடைகளில் பதுக்கி வைக்கப்படாதது தெரியவந்தது.

மேலும் செய்திகள்