ஆசிரியை வீட்டில் நூதன முறையில் கொள்ளையடித்த 5 பேர் கைது 3 பேருக்கு வலைவீச்சு

செய்யாறில் ஆசிரியை வீட்டில் நூதன முறையில் கொள்ளையடித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-06-10 23:15 GMT
செய்யாறு,

செய்யாறு டவுன் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ஏகநாதன், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 54), செய்யாறு தாலுகா பைங்கினர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள் விஜயலட்சுமி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார். விஜயலட்சுமிக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக தாய் வீட்டில் தங்கி சிகிச்சை செலவுக்காக ரூ.3 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார்.

நூதன முறையில் கொள்ளை

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி விஜயலட்சுமி தாய் வீட்டில் இருந்த போது வீட்டிற்கு வெளியே யாரோ அழைக்கும் குரல் கேட்டு வெளியே வந்த விஜயலட்சுமி யிடம் பேச்சு கொடுத்த சாமியார் வேடமணிந்த மர்ம நபர்கள் அனைத்து குடும்ப விவரங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் வந்தவர் களில் சிலர் வீட்டிற்குள் சென்று அங்கிருந்த தனலட்சுமி யிடம் உங்கள் மகள் விஜய லட்சுமி திருமணமாகி 5 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தையில்லை, அதற்கு முன்ஜென்மத்தில் செய்த பாவச்செயல்கள் தான் காரணம். பாவத்தினை போக்கினால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும், அதற் கான பரிகாரமாக அன்ன தானம் செய்திட வேண்டும் என கூறினர். மேலும் விபூதி போல பொடியை வீடு முழுவதும் தூவினர். இதில் தனலட்சுமி சுயநினைவின்றி வீட்டிலிருந்த பணத்தில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்துள் ளார். பணத்தை பெற்று கொண்ட அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். சிறிது நேரம் கழித்த பிறகே தங்களை ஏமாற்றி நூதன முறையில் பணம் கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது.

5 பேர் கைது

இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் செய்யாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் குற்ற வாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு குண சேகரன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் போளூர் தாலுகா குருவிமலை கிராமத்தை சேர்ந்த காசி(44), வேலுசாமி (55), ஜெயவேல் (55), ராமலிங்கம் (61), மணி (65) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சத்தையும், அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய செந்தில், ஆறுமுகம், பிரகாஷ் ஆகி யோரை தேடி வருகின்றனர்.

போலீசார் விசாரணையில் இந்த கும்பலில் உள்ளவர்கள் அனைவரும் உறவினர்கள் என்றும், இந்த கும்பல் பல ஆண்டுகளாக இதே பாணியில் நூதன முறையில் பல லட்சம் கொள்ளையடித்து சிறைக்கு சென்றுள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்