பத்திரப்பதிவுத்துறை இணையதளத்தில் கிராமப்புற நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு குறைக்கப்படாத நிலை

பத்திரப்பதிவுத்துறை இணையதளத்தில் கிராமப்புற நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு குறைக்கப்படாத நிலை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Update: 2017-06-10 22:15 GMT

விருதுநகர்,

பத்திரப்பதிவுத்துறை இணையதளத்தில் கிராமப்புற நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்படாமல் உள்ளது. இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அறிவிப்பு

தமிழக அரசு கடந்த 8–ந்தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 9–ந்தேதி முதல் 33 சதவீதம் குறைக்கப்பட்ட நிலங்களின் சந்தை மதிப்பு வழிகாட்டியானது தமிழகம் முழுவதும் உள்ள 50 பதிவு மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 8.6.2017–ந் தேதியில் நடைமுறையில் நிலங்களின் சந்தை மதிப்பு வழிகாட்டியில் 33 சதவீதம் குறைக்கப்பட்டு 9.6.2017– ந் தேதி முதல் அமலுக்கு வருவதால் சீரமைக்கப்பட்ட சதுரமீட்டர் மதிப்பானது கடந்த 8–ந்தேதி பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள மதிப்பில் 33 சதவீதத்தை குறைத்து 67 சதவீதத்துக்கு பத்திரப்பதிவுக்கு கணக்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீடு

இதனை தொடர்ந்து பத்திரப்பதிவுத்துறை இணையதளத்தில் நகர்ப்புறங்களுக்கான குறைக்கப்பட்ட நிலங்களின் வழிகாட்டு மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சதுரஅடி ரூ.1,000 வழிகாட்டி மதிப்புள்ள நிலத்துக்கு 9–ந்தேதி முதல் சதுரஅடி வழிகாட்டு மதிப்பு ரூ.670 என்றும், சதுரமீட்டர் வழிகாட்டு மதிப்பு ரூ.10,765 என்று இருந்த நிலத்துக்கு ரூ.7,215 என்று குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனவே நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களை பதிவு செய்யும் போது கடந்த 9–ந்தேதி பத்திரப்பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 33 சதவீதம் குறைக்கப்பட்ட வழிகாட்டு மதிப்பின்படி பதிவு செய்து கொள்ளலாம்.

கிராமங்கள்

ஆனால் கிராமப்புறங்களுக்கான நிலத்தின் வழிகாட்டு மதிப்பு பத்திரப்பதிவுத்துறை இணையதளத்தில் நேற்று வரை அரசு அறிவித்தபடி குறைக்கப்படாமல் பழைய வழிகாட்டி மதிப்பே நீடிக்கிறது.

பத்திரப்பதிவுத்துறை சுற்றறிக்கையின் படி கடந்த 9–ந்தேதி பதிவுத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பின்படி பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமப்புற நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போது பத்திரப்பதிவுத்துறையினருக்கும் பத்திரப்பதிவு செய்வோருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

கோரிக்கை

எனவே தமிழக அரசு கடந்த 8–ந் தேதி அறிவித்தப்படி பத்திரப்பதிவுத்துறை இணையதளத்தில் அனைத்து கிராமங்களுக்கான நில வழிகாட்டி மதிப்பில் 33 சதவீதத்தை குறைத்து புதிய வழிகாட்டி மதிப்பினை இணையதளத்தில் உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இல்லையேல் பத்திரப்பதிவில் தொடர்ந்து முடக்கமாகும் நிலையே ஏற்படும்.

மேலும் செய்திகள்