புதுமடத்தில் முன்மாதிரி மழைநீர் சேகரிப்பு குளம் அமைக்கும் பணி, கலெக்டர் நடராஜன் ஆய்வு

மண்டபம் யூனியன் புதுமடத்தில் முன்மாதிரி மழைநீர் சேகரிப்பு குளம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-06-10 22:15 GMT
பனைக்குளம்,

மண்டபம் யூனியன் புதுமடம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். புதுமடம் ஊராட்சியில் அம்மாபட்டினம், அகஸ்தியர்கூட்டம், நாரையூருணி, குண்டுத்தி, சத்தியாநகர் என 5 கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மீனவர்கள் வசிக்கின்றனர். மாவட்டத்தில் ஒரு முன்மாதிரியான கிராமமாக அனைத்து சமுதாய மக்களும் மிகுந்த ஒற்றுமையுடன் செயல்பட்டு கிராம வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாணவர்களுக்காக கல்விக்கூடங்கள், விளையாட்டுக்களில் சிறந்து விளங்க மைதானங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு தனி கல்விக்கூடம் அமைக்க இப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தை வழங்கியுள்ளார். தங்களது கிராமத்தில் சுகாதாரம் கெட்டு விடக்கூடாது என்ற நோக்கிலும், நோய் பரவாமல் தடுக்கவும் கிராமமக்கள், இஸ்லாமிய அமைப்பினர் புதிதாக டிராக்டர் வாங்கி அதன் மூலம் தினமும் ஊராட்சி பகுதிகளில் இலவசமாக குப்பைகளை அகற்ற நட வடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு பல்வேறு மக்கள் பணிகளை கிராம மக்கள் சார்பில் புதுமடம் இஸ்லாமிய அமைப்புகள் போட்டி போட்டு செய்து வருகின்றன.

முன்மாதிரி குளம்

இந்த நிலையில் புதுமடம் பாலம் அருகே உள்ள பகுதியில் மழைக்காலங்களில் மழைநீரை முழுமையாக சேகரிக்கும் வகையிலும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கவும் கால்வாய் கட்ட கடந்த 50 ஆண்டுகளுக்குமுன் இந்த கிராமத்தினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் தொடர் முயற்சி மேற்கொள்ளாததால் அந்ததிட்டம் கிடப்பில் போடப் பட்டது. தற்போது புதுமடம் ஊராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் இந்த முயற்சியை மீண்டும் மேற்கொள்ள கிராம மக்கள் சார்பில் இஸ்லாமிக் அறக்கட்டளை முயற்சி மேற்கொண்டு அந்த பகுதியில் கருவேல மரங்களை அகற்றினர்.

பிறகு நிலத்தடி நீரை அதிகரிக்கவும், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் மழைநீரை முழுமையாக சேரிக்க முன்மாதிரி மழைநீர் சேகரிப்பு குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட கலெக்டர் நடராஜனிடம் மனுகொடுக்கப்பட்டு அனுமதிபெறப்பட்டது. அதனை தொடர்ந்து ஊராட்சி உதவி இயக்குனர் அறிவுரையின்படி வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா பரிந்துரையின்படி இதற்கான பணிகள் தொடங்கின.

ஆய்வு

இந்த பணிகள் தொடங்கப்பட்டு எந்திரங்கள் மூலம் 1½ ஏக்கரில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். மேலும் மக்கள் பயன்பாட்டிற்காக குளத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடவேண்டும். நடைபயிற்சி மேற்கொள்ள தளம் அமைக்க வேண்டியும், குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கவும் கலெக்டர் கேட்டுக்கொண்டு கிராமமக்கள், புதுமடம் இஸ்லாமிக் அறக்கட்டளை நிர்வாகிகளை பாராட்டினார். முன்னதாக புதுமடம் இஸ்லாமிக் அறக்கட்டளை சார்பில் தலைவர் ஹலீம், பொருளாளர் முகமது முஸ்தபா, துணை பொருளாளர் ஹாருஸ், மற்றும் வடக்குத்தெரு, தெற்குத்தெரு, நடுத்தெரு ஜமாத் பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கலெக்டருக்கு வரவேற்பு அளித்தனர். அவருடன் திட்ட இயக்குனர் தனபதி, ஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முல் ஜாமியா, ராஜா, மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்