23 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது: மித்ராவயலில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை

காரைக்குடி அருகே மித்ராவயலில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் 23 நாட்களாக நடத்தி போராட்டத்திற்கு பலனாக அக்கடையை நிரந்தரமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2017-06-10 21:30 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே மித்ராவயலில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் 23 நாட்களாக நடத்தி போராட்டத்திற்கு பலனாக அக்கடையை நிரந்தரமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

டாஸ்மாக் கடை

காரைக்குடி அருகே உள்ளது மித்ராவயல். இந்த கிராமத்தில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராமமக்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், மாதர் சங்கத்தினர், மகளிர் சுயஉதவி குழுவினர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அக்கடை மூடப்பட்டது. ஆனால் நிரந்தரமாக மூடுவதற்கான எந்த உத்தரவும் அரசால் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் கடையை அகற்றக்கோரி கடந்த 23 நாட்களாக இரவு–பகலாக டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டும் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

தொடர் போராட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம், மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி பாடியும், காதில் பூவைத்தும், நெற்றியில் நாமம் இட்டும், தூக்கில் தொங்கும் போராட்டம், பாடை கட்டி போராட்டம், எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் என பல்வேறு கட்டங்களாக டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினர். இவ்வாறு கடந்த 22 நாட்களாக போராட்டம் தொடர்ந்தது. ஆனால் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தியும், எந்தவொரு அதிகாரிகளும் கண்டுகொள்ளவே இல்லை.

இந்தநிலையில் நேற்று 23 நாளாக டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் பொதுமக்களோடு சேர்ந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், நேற்று முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் கண்ணன் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தார்.

பேச்சுவார்த்தை

அதன்படி காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை, பொதுமக்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி, டாஸ்மாக் பொது மேலாளர் சங்கரலிங்கம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கல்பனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தையில் மித்ராவயலில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு அரசு உத்தரவு வந்தவுடன் அக்கடை அகற்றப்படும். அதுவரை சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் அக்கடை மூடப்பட்டே இருக்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்