பர்கூர் அருகே பரபரப்பு: மகனை கிணற்றில் வீசி கொன்று தாயும் குதித்து தற்கொலை
பர்கூர் அருகே பரபரப்பு: மகனை கிணற்றில் வீசி கொன்று தாயும் குதித்து தற்கொலை திருவிழாவுக்கு கணவர் அழைத்து செல்லாததால் விபரீத முடிவு
அந்தியூர்,
திருவிழாவுக்கு கணவர் அழைத்து செல்லாததால் பர்கூர் அருகே மகனை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருவிழாவுக்கு அழைத்து செல்லவில்லைஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் அருகே உள்ள ஒன்னக்கரை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவர் சொந்தமாக லாரி வைத்து ஒட்டி வருகிறார். இவருக்கும் பர்கூர் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்த விஜயா (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய மகள் பார்வதி (5), மகன் நாகேஷ் (3). இதில் பார்வதி அருகே உள்ள அரசு பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வருகிறாள்.
செங்குளத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அதனால் விஜயா கணவர் பிரகாசிடம் தன்னை கோவில் திருவிழாவுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். அதற்கு பிரகாஷ், ‘எனக்கு வேலை இருக்கிறது. அதனால் நீயும், குழந்தைகளும் சென்று வாருங்கள். என்னால் இப்போது வர இயலாது.’ என்றார். அதற்கு விஜயா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கும், பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பிணமாக மிதந்தனர்...இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை பிரகாஷ் லாரி ஓட்ட சென்றுவிட்டார். பிறகு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் சிறுமி பார்வதி மட்டும் இருந்தாள். விஜயாவையும், நாகேசையும் காணவில்லை இதனால் பிரகாஷ் பல இடங்களில் அவர்களை தேடிப்பார்த்தார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியில் ஊர் பொதுக்கிணற்றில் விஜயாவும், நாகேசும் நேற்று மாலை பிணமாக மிதந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி 2 பேரின் உடல்களையும் மீட்டனர். இதற்கிடையே தகவல் கிடைத்து பிரகாசும் அங்கு சென்று பார்த்தார். மனைவி குழந்தையை பார்த்து அவர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது
தற்கொலைபோலீசார் நடத்திய விசாரணையில், ‘கணவர் பிரகாஷ் தன்னை கோவில் திருவிழாவுக்கு அழைத்து செல்லாததால் விஜயா மனம் உடைந்து. ‘இனி வாழ்வதை விட சாவதே மேல்’ என்ற முடிவுக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை பார்வதி பள்ளிக்கு சென்றுவிட்டாள்.
விஜயா குழந்தை நாகேசை அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள ஊர்பொதுக்கிணற்றுக்கு சென்றுள்ளார். பின்னர் நாகேசை தூக்கி கிணற்றில் வீசி கொன்றுவிட்டு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.’ தெரியவந்தது.
உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.