தஞ்சையில் முத்து பல்லக்கில் விநாயகர், முருகன் வீதி உலா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சையில் முத்து பல்லக்கில் விநாயகர், முருகன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2017-06-10 22:45 GMT

தஞ்சாவூர்,

தஞ்சையில் முத்து பல்லக்கு விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் விநாயகருக்கு எடுத்த விழாவாக நடைபெறும் இந்த விழாவில் தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்து பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்து பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற்றது.

முத்து பல்லக்கு விழா நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜோதி விநாயகர்

முத்து பல்லக்கு விழா, தஞ்சை கீழவாசலில் உள்ள வெள்ளை விநாயகர் கோவிலில் 91–ம் ஆண்டு புஷ்ப விமான பல்லக்கு விழாவாகவும், தஞ்சை மகர் நோம்புச்சாவடி விஜயமண்டபத்தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் 50–ம் ஆண்டு பொன்விழா முத்துப்பல்லக்கு விழாவாகவும் கொண்டாடப்பட்டது. மாமாசாகிப் மூலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் 73–வது ஆண்டு முத்து பல்லக்கு விழா, கீழவாசல் உஜ்ஜையினி மாகாளிஅம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் கல்யாண கணபதி, தெற்கு ராஜவீதியில் உள்ள கமலரத்ன விநாயகர் கோவில் இருந்து முத்து பல்லக்கில் கமலரத்ன விநாயகரும் எழுந்தருளி 4 ராஜ வீதிகளில் உலா வந்தனர்.

பாலதண்டாயுதபாணி

தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் 107–ம் ஆண்டு முத்து பல்லக்கு விழா நடந்தது. விழாவையொட்டி பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பாலதண்டாயுதபாணியும், விநாயகரும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கீழவாசல் குறிச்சித்தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் இருந்து சுப்பிரமணியர், வள்ளி–தெய்வாணையுடன் அலங்கரிக்கப்பட்ட முத்த பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து முத்து பல்லக்குகளில் விநாயகர், முருகன் உள்பட பல்வேறு சாமிகள் எழுந்தருளி 4 ராஜ வீதிகளிலும் இன்று அதிகாலை வரை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்