டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 4–வது நாளாக பெண்கள் போராட்டம்

மூலனூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 4–வது நாளாக பெண்கள் போராட்டம்

Update: 2017-06-10 22:30 GMT

மூலனூர்,

மூலனூர் அருகே உள்ள கொல்லபட்டியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 4–வது நாளாக பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி மூலனூர்–அக்கரைப்பாளையம் ரோட்டில் நத்தப்பாளையத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது.

இந்த டாஸ்மாக் கடைக்கு மாற்றாக மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கொல்லபட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு கொல்லபட்டி, நத்தப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

4–வது நாளாக போராட்டம்

அத்துடன் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால், குழந்தைகள், மாணவ–மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும் என்றும், குறிப்பாக குமரகவுண்டன் வலசு கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கூறி கடந்த 7–ந் தேதி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அன்று டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

அன்று முதல், தினமும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை அந்த டாஸ்மாக் கடைக்கு முன்பாக 100–க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 4–வது நாளாக டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் திரண்டு, போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக கடந்த 4 நாட்களாக டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:–

டாஸ்மாக் கடை திறந்த 2–வது நாள் முதல் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறோம். அப்போது இந்த டாஸ்மாக் கடையை அகற்ற உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்