தாலுகா அலுவலகத்தில் பொருட்களை சூறையாடி ஊழியர்களை மிரட்டிய வழக்கில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பேருக்கு ஜாமீன்
கொள்ளேகால் தாலுகா அலுவலகத்தில் புகுந்து ஊழியர்களை மிரட்டிய வழக்கில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கி சாம்ராஜ்நகர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொள்ளேகால்,
கொள்ளேகால் தாலுகா அலுவலகத்தில் புகுந்து ஊழியர்களை மிரட்டிய வழக்கில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கி சாம்ராஜ்நகர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசு ஊழியர்களிடம் தகராறுசாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா உத்தப்பள்ளி கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சித்தப்பா. இதேபோல் குந்தூரு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் நாகராஜ். இவர்கள் 2 பேரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தங்கள் பகுதியில் விவசாய துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து கொள்ளேகால் தாலுகா அலுவலகத்தில் உள்ள விவசாயத் துறை அதிகாரிக்கு மனு அளித்தனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் சார்பில் விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தன்று இவர்கள் தாங்கள் அளித்த மனுகுறித்து தாலுகா அலுவலகத்தில் உள்ள விவசாயத் துறை அதிகாரியிடம் கேட்டு உள்ளனர்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் முறையாக பதில் அளிக்காததால் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி சித்தப்பா, நாகராஜ் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியதாக தெரிகிறது.
3 பேருக்கு ஜாமீன்இதுகுறித்து அரசு ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளேகால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ், சித்தப்பா உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடிவருகின்றனர். இதுகுறித்த வழக்கு சாம்ராஜ்நகர் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் சாம்ராஜ்நகர் மாவட்ட கோர்ட்டில் தங்களுக்கு ஜாமீன் வழங்ககோரி நாகராஜ் உள்பட 3 பேர் மனு செய்தனர். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நாகராஜ் உள்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.