சுயநிதி பள்ளிகளின் தொடர் அங்கீகாரத்தை உடனே புதுப்பிக்க வேண்டும்

சுயநிதி பள்ளிகளின் தொடர் அங்கீகாரத்தை உடனே புதுப்பிக்க வேண்டும் நர்சரி, மேல்நிலைப்பள்ளிகள் நல சங்கம் கோரிக்கை

Update: 2017-06-10 22:00 GMT

கோவை

தமிழகத்தில் சுயநிதி பள்ளிகளின் தொடர் அங்கீகாரத்தை உடனே புதுப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் டாடாபாத்தில் உள்ள பிரேம் கார்டன் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொதுசெயலாளர் ஜி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் சாவித்திரி ராமகிருஷ்ணன், பொருளாளர் பிரேமா சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

தமிழகத்தில் செயல்படும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளின் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையான தொடர் அங்கீகாரத்திற்கு விளக்கம் கேட்டுள்ளனர், ஆனால் விளக்கம் அளித்தும் பதில் அளிக்க அதிகாரிகள் தரப்பில் கால தாமதம் ஆவதால் இந்த பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் தொடர் அங்கீகாரம் பெற்ற நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பித்தலை தொடர வேண்டும். மத்திய கட்டாய கல்வி உரிமை சட்டப்படி இலவச கல்வியை வரவேற்கிறோம். இதன் பலன் உண்மையிலேயே ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு சென்று சேர வேண்டும். ஆனால் ஒரு சில அமைப்புகள் இதை தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றன. இதை தடுக்க வேண்டும். பள்ளிகளுக்கான குறைந்தபட்ச நிலப்பரப்பிற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு நியமித்த கமிட்டியின் அறிக்கையை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் செயல்படும் சுயநிதி பள்ளிகளின் கட்டிட விதிமுறைகளில் எந்த காலத்திலும் ஆர்.சி.சி. கட்டிடம் தேவை என்ற விதி இல்லை. ஆனால் தற்போது கல்வித்துறை அதிகாரிகள் ஓட்டுக்கட்டிடங்களையும், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், தீப்பிடிக்காத கான்கீரிட் கூரைகள் இருக்கும் பள்ளிகளின் தொடர் அங்கீகாரத்தை பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளதால் பல பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே அந்த பள்ளிகளின் தொடர் அங்கீகாரத்தை உடனே புதுப்பிக்க வேண்டும்.

முன்மழலையர் பள்ளிகளுக்கு தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரைவு திட்டம் வகுத்து கருத்துருக்கள் பெற்ற நிலையில் தமிழகத்தில் இதுவரையிலும் ஒரு பள்ளிக்கு கூட அனுமதி வழங்கவில்லை. அவற்றுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏராளமான பள்ளி நிர்வாகிகள் மற்றும் பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்