தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி பேட்டி;
ஊட்டி,
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி உள்ளதா? என்பதை கண்டறிய, அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
ஆலோசனைக்கூட்டம்நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியை முறையாக மாவட்ட நிர்வாகம் செலவிடாமல் திருப்பி அனுப்பி வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது. இந்த நிதியை மாவட்டம் முழுவதும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். நீலகிரி மாவட்ட பச்சை தேயிலை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் அரிசிதமிழகம் முழுவதும் கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. மாநில அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் தேவையான நீர்ப்பாசன கருவிகளை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இதனால் ஆராய்ச்சி மற்றும் புதிய கல்வி கொள்கை முறை கொண்டு வரப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது ஆந்திரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல தமிழ்நாட்டிலும் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிகிறது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் அரிசி உள்ளதா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினி விருப்பம்ஆளுங்கட்சியில், 2 அணிகள் மற்றும் 3 அணிகள் என்று பிரிந்து காணப்படுகிறது. இந்த அணிகளின் இணைப்பு பற்றியே மூத்த அமைச்சர்கள் பேசி வருகின்றனர். மக்கள் பிரச்சினையில் இவர்கள் அக்கறை செலுத்துவதில்லை. வருகிற ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு கொண்டு வரப்பட்டால், கோவை மற்றும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறு, குறுந்தொழில்கள், விசை பம்புகள் உற்பத்தி செய்வோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராமல் இருப்பதும் அவரது விருப்பம். பிறமாநிலங்களில் தமிழர்கள் எந்தவொரு முக்கிய பதவிக்கும் வரமுடியாது. எனவே, தமிழகத்தில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் பதவிக்கு வரக்கூடாது என்று மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில துணை செயலாளர் ஜான் லியோ, மாவட்ட தலைவர் நாகராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.