காட்டு யானைகள் தாக்கி தொழிலாளி படுகாயம்: வனத்துறை ஊழியர்களை பொதுமக்கள் சிறை பிடிப்பு

காட்டு யானைகள் தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து வனத்துறை ஊழியர்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-10 22:00 GMT

சின்னக்கானல்,

காட்டு யானைகள் தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து வனத்துறை ஊழியர்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டு யானைகள்

சின்னக்கானலை அடுத்துள்ள சிங்குண்டம் பகுதியை சேர்ந்தவர் சுனில்ஜார்ஜ் (வயது 28). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி அஞ்சு. நேற்று முன்தினம் காலை சுனில்ஜார்ஜ் தனது தாயார் மேரி, மனைவி அஞ்சு, தங்கை மினி ஆகியோருடன் வீட்டு வாசலில் நின்று பேசி கொண்டிருந்தார்.

அப்போது 2 காட்டு யானைகள் திடீரென அங்கு புகுந்தது. யானையை பார்த்த அவர்கள் ஓட்டம் பிடித்தனர். அந்த வேளையில் சுனில்ஜார்ஜ் எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி விழுந்தார். இதனால் காட்டு யானைகள் அவரை தாக்கியது. பலத்த காயங்களுடன் யானைகளின் பிடியில் சிக்கினார்.

சிறை பிடிப்பு

இதற்கிடையே காட்டு யானைகள் புகுந்ததை அறிந்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். பின்னர் சத்தம் எழுப்பி காட்டு யானைகளை விரட்டினர். இதைத்தொடர்ந்து சுனில்ஜார்ஜை மீட்டு சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சுனில்ஜார்ஜை காட்டு யானைகள் தாக்கியதை தொடர்ந்து, தேவிகுளம் வனச்சரகர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது காட்டு யானைகளிடம் இருந்து பொதுமக்களின் உடைமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக்கோரி வனத்துறை ஊழியர்களை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிங்குண்டம் பகுதியில் பகல் நேரத்திலும் காட்டு யானைகள் உலா வருகின்றன. ஏலக்காய், தேயிலை தோட்டங்களில் பல லட்சம் மதிப்புள்ள பயிர்களை நாசப்படுத்தி உள்ளன. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள், சாந்தாம்பாறை, தேவிகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வனத்துறை ஊழியர்களை மீட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் வனத்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காட்டு யானைகளிடம் இருந்து பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை ஊழியர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வனத்துறை ஊழியர்களை பொதுமக்கள் சுமார் 5 மணி நேரம் சிறை பிடித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்