தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்;

Update: 2017-06-10 22:45 GMT

திண்டுக்கல்

தமிழகத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை தீர்க்க, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

கள்ளத்தனமாக மது விற்பனை

திண்டுக்கல்லுக்கு பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ம.க. தொடர்ந்த வழக்கில் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் 60 சதவீத மதுக்கடைகள் மூடப்பட்டன.

இதன்மூலம் குறைந்தபட்சம் 50 சதவீத மதுபான விற்பனையாவது குறைந்திருக்க வேண்டும். ஆனால் 15 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதே முக்கிய காரணம் ஆகும். சில அமைச்சர்கள் மற்றும் போலீசாரும் இதற்கு உடந்தையாக உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

மணல் கொள்ளை

தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள் தொடங்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது ஆளுங்கட்சியினர் கொள்ளை அடிப்பதற்கே உதவும். எனவே புதிய மணல் குவாரிகள் அமைக்க கூடாது. இருக்கிற மணல் குவாரிகளையும் மூட வேண்டும். பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். இதனை திரும்ப பெற வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 450 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மேலும், விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மாற்றுத் திட்டத்தை கொண்டு வரவேண்டும். கல்வித்துறையில் கொண்டு வந்துள்ள புதிய திட்டங்களை வரவேற்கிறோம். ஆனால் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதுதான் நியாயம் ஆகும். திண்டுக்கல்லில், அறிவித்ததோடு கிடப்பில் போடப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவேண்டும். மேலும் பழனி பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கழகங்களின் ஆட்சி வேண்டாம் என்று கூறும் பா.ஜ.க.வுக்கு, ஜனாதிபதி தேர்தலில் மட்டும் கழகங்களின் ஓட்டு தேவைப்படுகிறது.

தமிழக அரசியலில் மெகா தொடர் நாடகம் நடந்து வருகிறது. ஆளுங்கட்சிக்குள் அதிகாரத்துக்காக நடக்கும் போட்டி மிகவும் கேவலமாக உள்ளது. விரைவில் அவர்களே ஆட்சியை கலைத்து விடுவார்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

நடிகர்கள் தேவை இல்லை

அரசியலுக்கு நடிகர்கள் தேவை இல்லை. படித்தவர்கள், இளைஞர்கள் வரவேண்டும். இவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் அதிகமாகவே உள்ளனர். எனவே நிச்சயமாக நாங்கள் ஆட்சியை பிடிப்போம். தமிழகத்தில் விவசாயிகள், மீனவர் பிரச்சினை, மேகதாது, முல்லைப்பெரியாறு அணை, அட்டப்பாடி, காவிரி பிரச்சினை உள்பட பல்வேறு முக்கியமான மக்கள் பிரச்சினைகள் உள்ளன.

இவற்றை தீர்க்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் ஒரு கோடி பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.

இருண்ட காலம்

ஆனால், ஆளுங்கட்சினர் லஞ்சம் கேட்பதால் தொழில் முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்துக்கு செல்கின்றனர். இதன்காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமல் படித்த இளைஞர்கள் திண்டாடுகின்றனர். தமிழகத்தில் ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் கோடி நிர்வாக கடன் உள்ளது. இது அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது தமிழகத்துக்கு மோசமான இருண்ட காலம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்