கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு

ஜெயங்கொண்டத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

Update: 2017-06-10 22:45 GMT
வாரியங்காவல்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரிசி மண்டி, சில்லறை விற்பனை அரிசி கடைகள் உள்ளிட்டவற்றில் அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகநாதன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சசிக்குமார், சிவக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என அரிசியை மென்று பார்த்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அதேபோல் ஓட்டல்களிலும் இட்லி அவிப்பதற்கு பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தனர். மேலும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்களில் இட்லி அவிப்பது, பிளாஸ்டிக் பேப்பரில் உணவு பறிமாறுவது போன்ற வகைகளில் பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்த கூடாது எனவும் அதிகாரிகள் ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் பேப்பர் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் கடைகளில் வழங்கப்பட்டது. மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தரம் குறைவான உணவு பொருட்கள் தொடர்பாக 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறினர். 

மேலும் செய்திகள்