தேனி வனப்பகுதியில் காட்டுத்தீ அணைக்க முடியாமல் வனத்துறை திணறல்

தேனி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

Update: 2017-06-10 21:30 GMT

தேனி,

தேனி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

வனப்பகுதியில் தீ

தேனி மாவட்ட வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. தேனி வீரப்ப அய்யனார் கோவில் வனப்பகுதி, மரக்காமலை வனப்பகுதி போன்ற இடங்களில் அவ்வப்போது தீ விபத்து நடக்கிறது. நேற்று முன்தினம் இரவில் வீரப்பஅய்யனார் கோவில் மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இந்த தீ வேகமாக வனப்பகுதியில் பரவியது. நள்ளிரவு நேரத்தில் கொழுந்து விட்டு தீ எரிவதை தேனியில் இருந்து பார்க்க முடிந்தது. விடிய, விடிய இந்த தீ எரிந்து கொண்டு இருந்தது. நேற்று பிற்பகல் 2 மணி வரை இந்த தீ எரிந்து கொண்டு இருந்தது. மேலும் பகல் நேரத்தில் மலைப்பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது.

மழையால் அணைந்தது

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த போதிலும், தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறினர். தீயை அணைக்க போதிய ஆட்கள் இல்லை என்று கூறப்படுகிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வனப்பகுதிக்கு சென்று தீயை அணைப்பதில் இதுபோன்ற தொய்வு அடிக்கடி ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பிற்பகல் 3 மணியளவில் தேனி வனப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் வனப்பகுதியில் எரிந்த காட்டுத்தீ அணைந்தது. இந்த தீ விபத்து காரணமாக வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசம் அடைந்தன. காட்டெருமைகள், மான்களுக்கு இரையாக பயன்படும் புற்கள் இந்த தீயில் கருகியதால், இரை தேடி வன விலங்குகள் அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு படையெடுக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்