தூத்துக்குடி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் பணிகளை தொடங்க வேண்டும் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சண்முகநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2017-06-10 20:45 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சண்முகநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் வெங்கடேசை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

பஸ் நிலையம்

தூத்துக்குடி மாநகராட்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். 4–வது குடிநீர் குழாய் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் மேம்பாலம் பணியை தொடங்க வேண்டும். தூத்துக்குடி 4–ம் கேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும். உடன்குடி அனல்மின்நிலைய பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கோவில்பட்டி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2–வது குடிநீர் குழாய் திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

வேம்பார் கப்பல் கட்டும் தளம் பணிகளையும், சூரங்குடி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும். ஓட்டப்பிடாரம் பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். சாத்தான்குளம் ஒன்றியம் கருமேனியாற்றின் குறுக்கே மணிநகரில் பாலம் கட்ட வேண்டும். கொங்கராயகுறிச்சி–கருங்குளம் உயர்மட்ட பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்