சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை அருகே சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2017-06-10 22:00 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது களமருதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெரு, தச்சர் தெரு, இஸ்லாமியர் தெரு உள்ளிட்ட தெருக்களை சேர்ந்த மக்களுக்கு கடந்த சில வாரங்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் நேற்று காலையில் உளுந்தூர்பேட்டை–திருவெண்ணெய்நல்லூர் சாலைக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்