அரக்கோணத்தில் வாலிபரை அடித்துக்கொன்று குப்பை கிடங்கில் வீசிய கும்பல் உடலை மண்எண்ணெய் ஊற்றி எரித்த கொடூரம்

அரக்கோணத்தில் வாலிபரை அடித்துக்கொன்ற கும்பல் அவரது உடலை குப்பை கிடங்கில் வீசி மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு தப்பியுள்ளது.

Update: 2017-06-10 00:40 GMT
அரக்கோணம்,

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் சாலையில் தனியார் தொழிற்சாலை அருகே மேம்பாலம் உள்ளது. அரக்கோணம் நகர பகுதியில் சேரும் குப்பைகள் இந்த மேம்பாலத்திற்கு கீழ் மலைபோல் கொட்டப்பட்டு உள்ளது. நேற்று காலை குப்பை கிடங்கில் இருந்து புகை மூட்டம் வந்தது. அருகில் நாய்களும் குரைத்துக்கொண்டு இருந்தன.

இந்த நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் குப்பை கிடங்கின் அருகே சென்றபோது வாலிபர் ஒருவரின் உடல் தீயில் எரிந்த நிலையில் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு கல்லால் தாக்கி சிதைக்கப்பட்டு இருந்தது. எனவே அந்த வாலிபரை யாரோ சிலர் கொலை செய்து விட்டு முகத்தையும் சிதைத்து உடலை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

ரத்தக்கறை

தகவல் அறிந்த அம்மனூர் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல், அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, ஜெயந்தி, பிரதாபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட வாலிபரின் பின்பக்க தலையில் பலத்த காயம் இருந்தது. பிணம் கிடந்த இடத்தில் இருந்து சில அடி தூரத்தில் ரத்தக்கறைகள் படிந்திருந்தன. மேம்பாலத்தின் சுவரிலும் ரத்தக்கறை காணப்பட்டது.

மோப்பநாய்

பிணத்தின் அருகே 2 ஜோடி பெட்சீட், ஒரு பெண்ணின் செருப்பு, ஒரு ஆணின் செருப்பு ஆகியவை கிடந்தது. இறந்த நபரின் தலையில் இருந்து மார்பு பகுதி வரை முழுவதுமாக தீயில் எரிந்து உள்ளது. கால் பகுதி எரியாமல் அப்படியே உள்ளது. உடலின் அருகே டி-சர்ட், லுங்கி மற்றும் சில பொருட்கள் கிடந்தன. இறந்து கிடந்த வாலிபருக்கு சுமார் 25 வயது வரை இருக்கும்.

சம்பவ இடத்திற்கு வேலூரில் இருந்து மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்த நாய்சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர் சென்று தடயங்களை சேகரித்து சென்று உள்ளார்.

கொலை நடந்த பாலத்தின் கீழே சிலர் அவ்வப்போது மதுபான பாட்டில்களை வாங்கி வந்து அமர்ந்து குடித்து விட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.

காரணம் என்ன?

கொலை செய்யப்பட்ட நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார், பெண் தொடர்பான கொலையா அல்லது மதுபோதையில் ஏற்பட்ட பிரச்சினையால் நடந்த கொலையா என அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்