மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வாய்க்கால்ரோடு நாகமலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 26). இவருடைய மனைவி கலைச்செல்வி. குடும்ப பிரச்சினை காரணமாக கலைச்செல்வி தனது கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். சரவணன் ஓடத்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி ஒருவர் கடந்த ஆண்டு பள்ளி விடுமுறையின் போது சரவணன் வேலை பார்த்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது சரவணனுக்கும், அந்த மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவணன் அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
கடத்தல்
பிளஸ் -2 தேர்வில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அந்த மாணவி பள்ளி விடுமுறை முடிந்ததும் ஈரோடு அருகே உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு சேர்ந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 23-6-2016 அன்று சரவணன் அந்த மாணவிக்கு போன் செய்து, நாளை கோபி பஸ் நிலையத்துக்கு வருமாறு கூறி உள்ளார். அதனால் அந்த மாணவி மறுநாள் கோபி பஸ் நிலையம் வந்து நின்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த சரவணன், கல்லூரி மாணவியை பின்னால் ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் சேவூருக்கு கடத்தி சென்றார். பின்னர் அங்குள்ள கரடிக்கோவிலில் வைத்து மாணவியின் விருப்பத்துக்கு மாறாக அவரது கழுத்தில் தாலி கட்டினார்.
பாலியல் பலாத்காரம்
இதைத்தொடர்ந்து நம்பியூர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சரவணன் அந்த மாணவியை அழைத்துச்சென்றார். அங்கு 4 நாட்கள் அந்த மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையே மாணவியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று கவுந்தப்பாடி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். அப்போது சரவணனும், அந்த மாணவியும் கவுந்தப்பாடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணனை கைது செய்தனர். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தற்போது மாணவி ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
ஆயுள் தண்டனை
பின்னர் இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி என்.திருநாவுக்கரசு தீர்ப்பு கூறினார். கல்லூரி மாணவியை கடத்திய குற்றத்துக்காக சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும், குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் இந்த தண்டனைகள் அனைத்தையும் சரவணன் ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பில் நீதிபதி கூறி இருந்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக் கீல் ஏ.நாகரத்தினம் ஆஜர் ஆனார்.