திருச்சி மெக்டொனால்டு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

திருச்சி மெக்டொனால்டு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2017-06-09 23:21 GMT

மதுரை,

திருச்சியை சேர்ந்த வையாபுரி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “திருச்சி மெக்டொனால்டு சாலையில் டாஸ்மாக் கடை (எண்–10296) செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடையால் ஏராளமான பிரச்சினைகள் உண்டாகின்றன. எனவே அந்த கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

முடிவில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று திருச்சி கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

துவாக்குடி

திருச்சி மாவட்டம் தூவாக்குடியை சேர்ந்த கே.ராமலிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் தஞ்சை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த கடையை துவாக்குடி சோழீஸ்வரர் கோவில் அருகில் மாற்றுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. மேலும் அங்கு 2 கோவில்கள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடை திறக்க உள்ள இடத்தில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் சுற்றுச்சாலை அமைக்கும் திட்டமும் உள்ளது. எனவே அங்கு டாஸமாக் கடை திறக்கக்கூடாது என்று வழிபாட்டு மன்றம் சார்பில் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம். ஆனால் அதிகாரிகள் அந்த மனுவை பரிசீலித்ததாக தெரியவில்லை. எனவே சோழீஸ்வரர் கோவில் அருகில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். எங்களது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

நோட்டீஸ்

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், திருச்சி கலெக்டர், டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் 7–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்