பாம்பன் ரோடு பாலத்தில் விபத்தை உருவாக்கும் சாலையின் தன்மையை மாற்றக்கோரி மறியல்

பாம்பன் ரோடு பாலத்தில் விபத்தை உருவாக்கும் சாலையின் தன்மையை மாற்றக்கோரியும் பணிகளை உடனே நிறுத்த வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.;

Update: 2017-06-09 23:20 GMT

ராமேசுவரம்

ராமேசுவரம் அருகே பாம்பன் ரோடு பாலத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக சாலை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய சாலை வழுவழுப்பாக காட்சியளித்து வருவதால் வாகனங்களில் டிரைவர்கள் பிரேக் பிடிக்கும்போது நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன. இவ்வாறு ரோடு பாலத்தில் 10–க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றுள்ளதுடன் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். விபத்தில் சிக்கி தங்கச்சிமடத்தை சேர்ந்த பாக்கியசீலி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் விபத்துக்கு காரணமாக கூறப்படும் சாலைப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும், விபத்தை ஏற்படுத்தாத வகையில் சாலையின் தன்மையை மாற்ற வேண்டும் என்றும் வாகன ஓட்டுனர்கள், பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், விபத்து நடைபெறாமல் தடுக்க வலியுறுத்தியும் நேற்று பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதியல் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதில் பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முருகானந்தம், நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகி டோம்னிக் ரவி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாம்பன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முரளி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ஆர்.டி.ஓ. நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளித்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கை விடுவோம் என தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆர்.டி.ஓ. பேபி காரில் அமர்ந்தபடி போராட்டக்காரர்களை அழைத்துவரும் போலீசாரிடம் தெரிவித்தார்.

அப்போது ஆர்.டி.ஓ.வை காரை விட்டு கீழே இறங்கி வரக்கோரி போராட்டக்காரர்கள் கோ‌ஷம் போட்டனர். அதன்பின் இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்திய அவரிடம், ரோடு பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் சாலையின் தன்மையை மாற்ற வேண்டும். பாலத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை பாலத்தில் ஒட்டவேண்டும்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து நடைபெறாமல் இருக்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு மாவட்ட கலெக்டரின் கவனத்திற்குகொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ. உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்