கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் சாவு

கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Update: 2017-06-09 23:20 GMT

மானாமதுரை

மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பிரசவத்திற்குபின் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் குழந்தை

மானாமதுரை அருகே உள்ள வன்னிக்குடி கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்வருடைய மகன் விஜயகுமார் (வயது26). இவருடைய மனைவி மாலதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாலதியை பிரசவத்திற்காக உறவினர்கள் மானாமதுரை அருகே உள்ள கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து கடந்த 8–ந் தேதி மாலதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மாலதியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அன்று நள்ளிரவு டாக்டர் வந்து பரிசோதனை செய்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் மாலதி உடல் நிலை மோசமாகி உயிரிழந்தார்.

உறவினர்கள் போராட்டம்

இதையடுத்து அவருடைய உடல் சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாலதியின் உறவினர்களுடன் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு அவரது உடலை வாங்க மறுத்து, உரிய விசாரணை நடத்தவேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து சுகாதார பணிகளின் இணை இயக்குனர் யசோதைமணி கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரணை நடத்தினார். மாலதியின் கணவர் விஜயகுமார் மானாமதுரை போலீசில் இது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை

இதையடுத்து சிவகங்கை தாசில்தார் நாகநாதன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்தனர். அதன்பின் மாலதியின் உடல் பிரேத பரிசோதனை நேற்று மாலை நடைபெற்றது. இச்சம்பவத்தை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி, சுகதாரத்துறை துணை இயக்குனர் யாசோதாமணி மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் வட்டார மருத்துவ அலுவலர், டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்