சேலம் மாவட்டத்தில், 259 நீர்நிலைகளில் 14 ஆயிரம் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துள்ளனர் கலெக்டர் சம்பத் தகவல்

சேலம் மாவட்டத்தில் 259 நீர்நிலைகளில் 14 ஆயிரம் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துள்ளனர் என்று கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-09 22:58 GMT
சேலம்,

சேலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக வண்டல் மண் எடுக்கும் பணியினை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை தாங்கி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சிகளுக்கு சொந்தமான 976 நீர்நிலைகள் வண்டல் மண் வெட்டி எடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 6-ந் தேதி வரை 259 ஏரி, குளங்களில் இருந்து 14,087 விவசாயிகள் 13,91,476 கனமீட்டர் வண்டல் மண் எடுத்து பயன்பெற்றுள்ளனர். சேலம் கோட்டத்தில் மட்டும் 52 ஏரி, குளங்களில் இருந்து 1,990 விவசாயிகள் 67,515 கனமீட்டர் வண்டல் மண் எடுத்துள்ளனர்.

மழைநீரை சேமிக்க இயலும்

இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சத்திற்கும் அதிகப்படியான விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்நிலைகளில் களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் கிராவல் ஆகியவை வெட்டி எடுக்கும் போது மேற்கண்ட நீர்நிலைகள் தூர்வாரி ஆழப்படுத்தப்படுவதால், மழை காலங்களில் கூடுதலான மழைநீரை சேமிக்க இயலும்.

ஏரி, குளங்களில் வெட்டி எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய நிலங்களில் கொட்டி பயன்படுத்தப்படும் போது, ரசாயனம் கலந்த செயற்கை உரங்கள் பயன்படுத்துவது குறைக்கப்பட்டு இயற்கையான முறையில் மண்ணிற்கு சிறந்த வளத்தை கொடுத்து விளைச்சலை அதிகரிக்க செய்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணியினை கலெக்டர் சம்பத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆணையாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்று இருந்தனர்.

மேலும் செய்திகள்