இறந்த கோழிகளில் மேல்மூச்சுக்குழாய் நோய் பாதிப்பு: உயிர் பாதுகாப்பு முறைகளை பண்ணையாளர்கள் கடைபிடிக்க வேண்டும்

கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல்மூச்சுக்குழாய் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதால்,

Update: 2017-06-09 22:40 GMT
நாமக்கல்,

பண்ணையாளர்கள் உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்குமாறு வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 4 நாட்கள் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 5 மி.மீட்டரும், 13-ந் தேதி 2 மில்லிமீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும்.

வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

உயிர் பாதுகாப்பு முறைகள்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும், மழைக்கான வாய்ப்பு மாவட்டத்தில் குறைவாகவே உள்ளது. வெப்ப அளவுகள் குறைந்திருக்கும் இத்தருணத்தில், கோழிகளில் வெப்ப அயற்சி இருக்காது.

சிறிது நேரத்திற்கு மட்டுமே நிலவும் அதிகபட்ச வெப்பநிலையாலும், சற்றே உயர்ந்து நிலவும் காற்றின் வேகத்தாலும், வெப்பத்தின் தாக்கம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது. இயல்பான தீவன மேலாண்மையுடன் அதிக காற்றினைத் தடுத்து தீவனத்தை விரயமின்றி பயன்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல்மூச்சுக்குழாய் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்