மானபங்கம் செய்து பட்டதாரி பெண்ணை ஓடும் ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம் டிரைவர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு

பட்டதாரி பெண்ணை மானபங்கம் செய்து, ஓடும் ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்ட கொடூர சம்பவம் தானேயில் நடந்துள்ளது.

Update: 2017-06-09 22:37 GMT

தானே,

பட்டதாரி பெண்ணை மானபங்கம் செய்து, ஓடும் ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்ட கொடூர சம்பவம் தானேயில் நடந்துள்ளது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஷேர் ஆட்டோவில் பயணம்

தானே ஆர்–மால் அருகே வசித்து வரும் 23 வயது பட்டதாரி பெண், முல்லுண்டில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் உணவு முறை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று பணி முடிந்து இரவு 9.30 மணியளவில் தானே ஹாத் நாக்கா பகுதியில் இருந்து வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.

அப்போது ஆட்டோவில் ஒருவர் மட்டுமே இருந்தார். சிறிது தூரம் சென்றவுடன் ஆட்டோவில் இருந்த நபர் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி, மானபங்கம் செய்ய தொடங்கினார்.

கீழே தள்ளிவிட்டனர்

இதையடுத்து ஆட்டோவை நிறுத்துமாறு இளம்பெண் கூறினார். ஆனால் டிரைவர் போக்ரான் ரோடு நோக்கி ஆட்டோவை வேகமாக ஓட்டினார். இதையடுத்து இளம்பெண் கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோவில் இருந்த பயணி, டிரைவர் இளம்பெண்ணை தாக்கி ஓடும் ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்டனர்.

இந்தநிலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காயமடைந்த இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து தானே நவ்பாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை மானபங்கம் செய்து, ஓடும் ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்ட ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் தானே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்