பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

Update: 2017-06-09 22:28 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர் நரிப்பள்ளியை சேர்ந்த ஒருவர், மலைவாழ் பழங்குடியின பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நரிப்பள்ளியில் இருந்து கேரளா சென்ற அவர் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்தார். மனைவி ஊரில் இருந்தார்.

இந்த நிலையில் கணவரை பார்ப்பதற்காக கேரளா செல்ல கடந்த 21.12.2012 அன்று இரவு அந்த பெண் மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது செல்போனில் பேசிய கணவர், தான் சில நாட்களில் ஊருக்கு வர இருப்பதாக தெரிவித்தார். பின்னர் தனது உறவினரான சக்திவேலை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் தனது மனைவியை ஊருக்கு அழைத்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த சக்திவேல், அந்த இளம் பெண்ணை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்.

ஆயுள் தண்டனை

பையர்நாயக்கன்பட்டி முனியப்பன் கோவில் அருகே சென்றபோது அந்த பெண்ணை தாக்கிய சக்திவேல் அவரை அந்த பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக தூக்கிசென்று பாலியல் பலாத் காரம் செய்தார். பின்னர் அந்த பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்தார். உடலை தீயிட்டு கொளுத்தி வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார், பாலியல் பலாத்காரம், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக கறிக்கடை தொழிலாளியான சக்திவேலை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, சக்திவேலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2500 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்