ஆவணங்களை தேட முடியவில்லை என்று பதிலளித்த மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-06-09 22:27 GMT

மும்பை,

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நெடுஞ்சாலைகளில் உள்ள பல மதுக்கடைகள் மராட்டியத்தில் மூடப்பட்டன. மேலும் சில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து அவற்றை சாதாரண சாலைகளாக மாற்றி மதுக்கடைகளை நீடிக்க செய்தது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு மராட்டிய அரசின் கலால் துறை வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து மதுக்கடை, பார் உரிமையாளர்கள் பலர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கில், மாநில நெடுஞ்சாலையாக வகைப்படுத்தப்பட்ட அறிவிக்கை அல்லது அது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதிகள் கேம்கர், சோனக் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில நெடுஞ்சாலையாக வகைப்படுத்தப்பட்ட அறிவிக்கை மற்றும் ஆவணங்களை அதிகாரிகளால் தேடிபிடிக்க முடியவில்லை என்று அரசு வக்கீல் தெரிவித்தார். மேலும் அவற்றை கூகுளில் கூட தேட முடியவில்லை என்று கூறினார். இதற்கு நீதிபதிகள் கடும் ஆட்சேபணை தெரிவித்தனர். வருகிற 12–ந் தேதிக்குள் அறிவிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்யாவிட்டால், கோர்ட்டு கடுமையான உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்