உடுமலையில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

உடுமலையில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக கூறி, பொதுமக்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-09 22:30 GMT

உடுமலை,

உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே பொள்ளாச்சி–பழனி தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி 11–வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் காந்திசந்து உள்ளது.

இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் அதன்பின்னர் அந்த குழி மூடப்படவில்லை. இதனால் அந்த குழியில் பாதாள சாக்கடை கழிவு நீர் கசிவதாகவும், அந்த கழிவு நீர், குடிநீரில் கலந்து வருவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகிறார்கள்.

இதையடுத்து அந்த குழியை மூட வேண்டும் என்றும், சுத்தமாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காந்திசந்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை பொள்ளாச்சி சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த சாலையில் வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

பேச்சுவார்த்தை

இது பற்றிய தகவல் அறிந்ததும் நகராட்சி பொறியாளர் தங்கராஜ், கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்த பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அந்த சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்