சென்னையில் வீடு இல்லாதோர் கணக்கெடுப்பு பணி தீவிரம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் 204 இடங்களில் வீடு இல்லாதோர் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீடு இல்லாதோருக்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு, அவர்களை இரவு காப்பகங்களில் தங்க வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீடு இல்லாதோருக்கான கணக்கெடுக்கும் பணியை 2 நாட்கள் மேற்கொள்ளுமாறும், தெருவோரம் தங்கியுள்ளவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் காப்பகங்கள் சென்னை மாநகரில் இயங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் 204 இடங்களில் தீவிர கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
தற்போது மேற்கொண்ட கணக்கெடுப்பில் மொத்தம் 1,014 பெண்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 574 பேர் வீடு இல்லாதோர் என பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 நபர்கள் கணக்கெடுப்பின் போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். 252 பேர் காப்பகத்தில் தங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.