குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா? குடோன்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Update: 2017-06-09 22:00 GMT
நாகர்கோவில்,

வெளி மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் அரிசி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் குடோன்களில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில்...

தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா உத்தரவின்பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அரிசி மொத்த விற்பனை கடைகள், சில்லரை விற்பனை கடைகள், குடோன்களில் சோதனை நடத்தப்பட்டது. குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் கருணாகரன் தலைமையில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

நாகர்கோவில் வடசேரி மற்றும் கோட்டார் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட அரிசி கடைகளில் அதிகாரிகள் குமாரபாண்டியன், சங்கரநாராயணன் ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ, 50 கிலோ அரிசி பைகள், 100 கிலோ மூடை ஆகியவற்றில் இருந்து மாதிரி எடுத்து சோதித்து பார்த்தனர்.

பரபரப்பு

இதேபோல் கன்னியாகுமரி, சுசீந்திரம், ராஜாக்கமங்கலம், முன்சிறை, மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 76 அரிசி கடைகளில் இந்த சோதனை நடந்தது.

சோதனையில் பிளாஸ்டிக் அரிசி எந்த கடையிலும் கைப்பற்றப்படவில்லை. அதேநேரத்தில் நாகர்கோவிலில் உள்ள சில கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரிசி பைகள் மற்றும் மூடைகளில் தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி ஆகியவை குறிப்பிடப்படாமல் இருந்தது. அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று கூறிய அதிகாரிகள், காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாத அரிசி பைகள் மற்றும் மூடைகளை சம்பந்தப்பட்ட அரிசி தயாரிப்பு நிறுவனங்களுக்கே அனுப்பி வைக்குமாறு வியாபாரிகளிடம் கூறினர். மாவட்டம் முழுவதும் அரிசி குடோன்கள், அரிசி கடைகளில் நடந்த இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாலின் தரம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாலித்தீன் பொருட்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு நடந்தது. விற்பனை செய்யப்படும் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? என்றும் பரிசோதிக்கப்பட்டது. விதிமீறல்கள் செய்த வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்