பொதுமக்கள் சாலை மறியல் பஸ்கள் நின்று செல்லாததால் ஆத்திரம்

தஞ்சை அருகே பஸ்கள் நின்று செல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-09 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி நோக்கி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், அங்கிருந்து தஞ்சை நோக்கி வரும் பஸ்களும் பெரும்பாலும் நின்று செல்வதில்லை. டவுன் பஸ்கள் மட்டும் நின்று செல்கின்றன. அனைத்து பஸ்களும் சூரக்கோட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்களிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பஸ்கள் நின்று செல்லாததால் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சூரக்கோட்டையில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த தஞ்சை தாசில்தார் தங்க.பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பிய பொதுமக்கள், போக்குவரத்து அலுவலர்கள் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

உறுதி

இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் அனைத்து பஸ்களையும் சூரக்கோட்டையில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து மாணவர்கள் சிலர் கூறும்போது, தஞ்சையில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறோம். நாங்கள் தினமும் காலையில் பள்ளிக்கு புறப்பட்டு விரைவாக வந்தாலும் பஸ்சிற்காக நீண்டநேரம் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு, தனியார் பஸ்கள் நிற்பதில்லை. டவுன் பஸ்கள் மட்டும் நின்று செல்வதால் அந்த பஸ்சில் ஏறி தான் தஞ்சைக்கு வருவோம். மாலையில் பள்ளி முடிந்தவுடன் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினால் சூரக்கோட்டையில் நிற்காது என்று சொல்லி கீழே இறக்கிவிட்டு விடுவார்கள். அப்படியே மீறி ஏறி வந்தாலும் சூரக்கோட்டையை தாண்டி வேறு இடத்தில் எங்களை இறக்கிவிட்டு சென்று விடுவார்கள். அப்படி இறக்கி விட கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள். பஸ்கள் அனைத்தும் சூரக்கோட்டையில் நின்று செல்ல வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டோம் என்றனர்.

மேலும் செய்திகள்