பிளாஸ்டிக் அரிசி பதுக்கல்: செங்குன்றத்தில், அரிசி ஆலைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
செங்குன்றத்தில் உள்ள 17–க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளிலும், அரிசி மொத்த வியாபார கிடங்குகளிலும் அதிரடியாக சோதனை நடத்தினர்.
செங்குன்றம்,
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின்பேரில் நேற்று மாலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி முத்துக்குமார் தலைமையில் 15 பேர் செங்குன்றத்துக்கு வந்தனர்.
அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து செங்குன்றத்தில் உள்ள 17–க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளிலும், அரிசி மொத்த வியாபார கிடங்குகளிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து மாதிரி அரிசியை எடுத்துச் சென்றனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சென்னைக்கு அரிசி வினியோகம் செய்யப்படும் முக்கியமான இடம் செங்குன்றம். இங்கு 100–க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இதனால் இந்த சோதனை நடைபெற்றது. இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் மாதிரி அரிசி சேலத்தில் உள்ள ஆய்வகத்தில் கொடுக்கப்படும். 10 நாட்களில் அந்த ஆய்வகத்தில் இருந்து முடிவு வந்து விடும். அவ்வாறு பிளாஸ்டிக் அரிசி பதுக்கப்பட்டு இருப்பது தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.