பாகமண்டலாவில் முழுஅடைப்பு; பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை சுற்றுலா பயணிகள் அவதி
தலக்காவிரியில் இருந்து வனப்பகுதிக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளே செல்ல அனுமதிக்கக் கோரி பாகமண்டலாவில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.
குடகு,
தலக்காவிரியில் இருந்து வனப்பகுதிக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளே செல்ல அனுமதிக்கக் கோரி பாகமண்டலாவில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த போராட்டத்தால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
தலக்காவிரிகுடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவிற்கு உட்பட்ட பாகமண்டலாவில் தலக்காவிரி அமைந்துள்ளது. இந்த பகுதி மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் தலக்காவிரி, காவிரி ஆறு உதயமாகும் இடம் என்பதால் இந்த இடத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு.
மேலும் தலக்காவிரி பகுதி மலைகளும், இயற்கை வளங்களும் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் அந்த இடம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இப்படி பல்வேறு சிறப்புமிக்க தலக்காவிரி பகுதியில் இருந்து, அதைச்சுற்றியுள்ள மலை மற்றும் வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்குமாறு கஸ்தூரி ரங்கன் அறிக்கை மூலம் மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதை பரிசீலித்த கர்நாடக மாநில அரசு தலக்காவிரி பகுதியில் இருந்து அதைச் சுற்றியுள்ள மலைகள், வனப்பகுதிகளுக்குள் செல்ல தடை விதித்தது. இதனால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள், அதே பகுதியைச் சேர்ந்த மக்கள் என யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
முழுஅடைப்பு போரட்டம்இந்த நிலையில் தலக்காவிரியில் இருந்து வனப்பகுதிக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளே சென்று வனப்பகுதியையும், மலைகள் மற்றும் இயற்கை அழகையும் ரசிக்க அனுமதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பல்வேறு அரசு அதிகாரிகளிடமும், அரசியல் தலைவர்களிடமும் மனு அளித்தனர். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் தலக்காவிரியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டி பாகமண்டலாவில் 9–ந் தேதி(அதாவது நேற்று) முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் போராட்ட அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறைஇந்த நிலையில் நேற்று கிராம மக்கள் போராட்ட அமைப்பினர் அறிவித்தது போல் பாகமண்டலாவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பாகமண்டலா பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. மேலும் அங்குள்ள கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டன.
ஓட்டல்கள், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் மட்டும் ஓடின. ஆஸ்பத்திரிகளும், மருந்தகங்களும் மட்டும் திறந்திருந்தன.
போக்குவரத்து நெரிசல்இதுமட்டுமல்லாமல் போராட்டக்காரர்கள் பாகமண்டலா டவுனில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலக்காவிரியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு உள்ளே செல்ல சுற்றுலா பயணிகள் உள்பட அனைவருக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
மேலும் தலக்காவிரி நுழைவு வாயில் உள்பட பல்வேறு இடங்களில் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பாகமண்டலா டவுன் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து அறிந்த போலீசார் போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்தனர்.
சுற்றுலா பயணிகள் அவதிமுழுஅடைப்பு போராட்டத்தினால் பாகமண்டலாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பாகமண்டலா மற்றும் தலக்காவிரிக்கு வந்த ஏராளமான சுற்றுலா பெரிதும் அவதி அடைந்தனர். சாப்பிடுவதற்கும், தங்குவதற்கும் ஓட்டல்கள் இல்லாமல் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
காலை 6 மணிக்கு தொடங்கிய முழுஅடைப்பு போராட்டம் மாலை 6 மணிக்கு முடிந்தது. அதன்பிறகு கடைகளும், ஓட்டல்களும் திறக்கப்பட்டன. தங்களது கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றவில்லை என்றால் அடுத்து மாநில அளவிலான முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் பாதுகாப்பு போராட்ட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.