விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த நடவடிக்கை: நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம் அமைக்க திட்டம்

கரூரில் விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தெரிவித்தார்.

Update: 2017-06-09 22:30 GMT
கரூர்,

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்காக பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்துவதற்காகவும், உள் விளையாட்டு அரங்கம் ஒன்று தனியாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் உருவாக்குவதற்காக கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரியும், கலெக்டருமான (பொறுப்பு)சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

இளைஞர்களுக்கு வழிகாட்டவும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும் விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு தனித்திறமை உள்ளது. அது என்னவென்று கண்டுகொண்டு அவர்களுக்கு சரியான முறையில் வயதிற்கு ஏற்றாற்போல் பயிற்சி அளித்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறச்செய்ய வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்களை நாம் ஊக்கப்படுத்தி பயிற்சி யளிக்க வேண்டும்.

வருங்கால சந்ததியினருக்காக சில வாய்ப்புகளை நாம் உருவாக்கி கொடுப்பது நமது கடமையாகும். அதன் அடிப்படையில், நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி மையம் அமைத்தல், நீச்சலில் பயிற்சி பெற்று போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நீச்சல் குளம் அமைத்தல், விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் மின் விளக்குகள் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தல், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக தனியாக கொட்டகை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடைபாதை

நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதை அமைத்தல், தனியாக அனைத்து வசதிகளுடன் கூடிய உள் விளையாட்டரங்கம் அமைத்தல் மற்றும் மாணவ, மாணவிகளுக்காக மாவட்ட விளையாட்டு விடுதி அமைத்தல் போன்ற வசதிகள் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்னன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்